தவறுதலாக 100 கிராம் தங்கக் கட்டியை 11 வயது சிறுவன் முழுங்கிய நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சிறுவனைக் காப்பாற்றி, தங்க கட்டியை மீட்டனர்.
சீனாவின் சுசோ பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆர்வத்தில் 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியை வாயில் போட்டு விளையாடியிருக்கிறார். இதில், தங்கம் தவறுதலாக விழுந்து செரிமானப் பாதையில் சிக்கிக் கொண்டது. சிறுவனுக்கு வயிறு சற்று உப்பியிருந்தாலும், பெரிய வலி எதுவும் காணப்படவில்லை. இது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர், அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக Soochow பல்கலைக்கழக சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில், செரிமானப் பாதையின் நடுப்பகுதியில் ஒரு கனமான உலோகப் பொருள் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. முதலில் மருத்துவர்கள், தங்கம் இயற்கையாக வெளியேறலாம் எனக் காத்திருந்தனர். லாக்ஸடிவ்கள் வழங்கி கவனித்தனர்.
2 நாட்கள் கடந்தும் தங்கக் கட்டி அசையாத நிலையில் இருந்ததால், குடல் அடைப்பு அல்லது கசிவுக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் சந்தேகித்து அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவு செய்தனர்.
சிறுவனின் வயதும், குடலின் உணர்திறனும் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச ஊடுருவும் எண்டோஸ்கோப்பிக் முறையில் 30 நிமிடங்களில் அறுவை சிகிச்சை மூலம் தங்கத்தை வெற்றிகரமாக அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் அடுத்த நாளே சாப்பிட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். சிக்கல் எதுவுமின்றி சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் தங்கக் கட்டியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.