நாசிக் நகரில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக வலைதளங்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் உள்ள உத்தம்நகர் பகுதியைச் சேர்ந்த வருமானவரி அதிகாரி ஹரேகிருஷ்ண பாண்டே (வயது 33), தனது திருமண நாளில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஹரேகிருஷ்ண பாண்டே, உத்தரப்பிரதேச மாநிலம் வராணாசியில் கடந்த வாரம் தன்னுடைய மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்துடன் திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது, மனப்பெண் தனது முன்னாள் காதலனை கட்டிபிடிக்கும் காட்சியை பார்த்த பாண்டே அதிர்ச்சியில் சோகத்திலும் மனவேதனையிலும் ஆழ்ந்துள்ளார்.
இதையடுத்து, திருமணத்தைத் தள்ளிப் போட விரும்பினார். ஆனால், திருமணத்தை நடத்தவேண்டும் என்று மனப்பெண் தரப்பினர் வற்புறுத்தியதாகவும், அவர் திருமணம் செய்ய மறுத்தால் பொய்யான மாப்பிள்ளை வேண்டி வழக்கில் புகார் கொடுக்கப்படுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த மன அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான பிளாக்மெயில் காரணமாக, ஹரேகிருஷ்ண பாண்டே தனது திருமண நாளன்று வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்தார். அவரது மரணம் வருமானவரி துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அம்பாட் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம், திருமண உறவுகளிலும், சமூக அழுத்தங்களிலும் இருந்து உண்டாகும் மனநலப் பிரச்சனைகள் குறித்து மீண்டும் கவனம் திருப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க, சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.