தனிமை - தனித்திருத்தல் என்ன வேறுபாடு? தனிமையை வெல்வது எப்படி?
BBC Tamil April 20, 2025 05:48 AM
Getty Images

ஒருபுறம், தனிமை ஒரு நோயாகக் ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகளை புகைப்பதுடன் ஒப்பிடக்கூடிய விளைவுகள் கொண்டதாக கருதப்படுகிறது.

மறுபுறம், தகவல் மற்றும் சமூக தொடர்புகள் நிறைந்த உலகில், சிறிது நேரம் தனியாக இருப்பது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல விஷயமாக இருக்கும்.

இந்த இரண்டையும் எவ்வாறு சமநிலைப்படுத்த முடியும்?

மேரி ஷெல்லியின் ஃபிராங்கண்ஸ்டைன் ஒரு அறிவியல் முயற்சியின் போது உருவாக்கப்பட்ட ஒரு அசுரனின் நிராகரிப்பு மற்றும் தனிமைப்படுத்தலைப் பற்றி விவாதிக்கிறது. எட்வர்ட் மன்ச்சின் ஓவியமான தி ஸ்க்ரீம் ஒரு அவநம்பிக்கையான மனிதனை சித்தரிக்கிறது. அவர் தனக்கு ஆதரவளிக்க ஒரு நபர் கூட இல்லாமல் வேதனையில் இருப்பதை பேசுகிறது. எலினோர் ரிக்பி பாடலில், பீட்டில்ஸ் "தனிமையான மக்களை" கவனித்து, "அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்" என்று கேள்வி எழுப்பினர்.

தனிமை (loneliness) மற்றும் தனித்திருத்தல் (solitude) பற்றிய கருத்துகள் அனைத்து வகையான கலைகளிலும் பிரபலமான தலைப்புகளாக உள்ளன என்பதற்கு இவை மூன்று எடுத்துக்காட்டுகள். தனிமை எப்படி சமூகத்திலும் நமது சமூக தொடர்புகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் காட்டுகிறது.

கடந்த தசாப்தத்தில் இந்த விஷயம் மேலும் விவாதிக்கப்படும் பொருளாக மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

2023 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு (WHO) தனிமையை "உலகளாவிய பொது சுகாதார பிரச்னை" என்று அறிவித்து, பிரச்னையைத் தீர்க்க ஒரு சர்வதேச குழுவை உருவாக்கியது.

ஆனால் அதே நேரத்தில், செய்திகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடக அறிவிப்புகள் மற்றும் பிற தகவல்கள் நம்மை சுற்றிலும் குவிந்துவருகின்றன. சிறிது நேரம் தனியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை பலரும் வலியுறுத்துகின்றனர்.

தனிமையைத் தவிர்த்து, அர்த்தமுள்ள தொடர்புகள் மூலம் ஒரு சமூகத்துடன் இணைந்திருப்பதை உணர முடியுமா, அதே நேரத்தில் தனித்திருத்தல் மற்றும் சுய பிரதிபலிப்பு தருணங்களுக்கு இடம் இருக்கிறதா?

பிபிசி இந்த கேள்விகளை வல்லுநர்களிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் கேட்டது - நம் அன்றாட வாழ்க்கையில் இந்த சமநிலையை அடைவதற்கான சில நடைமுறை உதவிக்குறிப்புகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

தனிமை மற்றும் தனித்திருத்தலுக்கான வித்தியாசம் என்ன?

தனிமை என்பது ஒரு "அகநிலை மற்றும் விரும்பத்தகாத உணர்ச்சி" ஆகும். இது "நீங்கள் விரும்புவதை விட குறைந்த தரத்திலான சமூக உறவுகளை உணரும் போது எழுகிறது" என்று பிரிட்டனின் ஷெஃபீல்ட் ஹாலம் பல்கலைக்கழகத்தின் தனிமை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஆண்ட்ரியா விக்ஃபீல்ட் விளக்குகிறார்.

உங்கள் தனிப்பட்ட உறவுகளின் தரம் நீங்கள் விரும்புவதை விட மோசமாக இருப்பதாக நீங்கள் உணரும் போது தனிமை ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அல்லது உங்கள் சக ஊழியர்களுடன் ஒப்பிடும்போது, உங்கள் உறவுகள் பலவீனமாகவும் குறைந்த சுவாரஸ்யம் கொண்டதாகவும் தோன்றுவதால் நீங்கள் அதிருப்தி அடைகிறீர்கள்.

ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நபர் விரைவில் தனிமையானவராக மாறக்கூடும் என்றாலும், ஒரு கூட்டத்தில் கூட ஒருவரால் தனியாக உணர முடியும் என்பதும் உண்மைதான்.

நீங்கள் எங்கும் சொந்தமில்லை அல்லது உங்கள் இணைப்புகளின் தரம் போதுமானதாக இல்லை என்ற உணர்வு, இந்த அகநிலை மற்றும் விரும்பத்தகாத உணர்ச்சிக்கு விரைவாக வழிவகுக்கும் என பேராசிரியர் விக்ஃபீல்ட் எச்சரிக்கிறார்.

இது ஒரு நீண்டகால பிரச்னை என்றாலும், கோவிட் -19 பெருந்தொற்றின் போது ஏற்பட்ட நீண்ட ஊரடங்குகள் காரணமாக லட்சக்கணக்கானவர்களுக்கு தனிமை ஒரு சவாலாக மாறியுள்ளது . இதனால் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

மறுபுறம், தனித்திருத்தல் என்பது ஒரு தற்காலிக நிலை மற்றும் வரவேற்கத்தக்க அமைதியின் தருணமாக இருக்கும்.

இது நீங்கள் உடல் ரீதியாக தனியாக இருப்பது, சமூக ஊடகங்களில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது என்று பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் தனித்திருத்தல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளரான உளவியலாளர் துய்-வி நுயென் விளக்குகிறார்.

Getty Images தனிமை உடலை என்ன செய்கிறது?

தனிமை உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், சமூக தனிமைப்படுத்தலுக்கும் இதய நோய், பக்கவாதம், வகை 2 நீரிழிவு நோய், தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புக்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தியது.

தனிமை டிமென்ஷியா, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் அனைத்து காரணங்களிலிருந்தும் இறக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கான ஆதாரங்களும் அதிகரித்து வருகின்றன என்று விக்ஃபீல்ட் கூறுகிறார்.

இந்த தொடர்புக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. உடலில் அதிகரித்த மன அழுத்தம் மற்றும் தனிமை தொடர்பான அறிவாற்றல் தூண்டுதல் இல்லாததால் இது நிகழ்கிறது என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள் - இது மன நலனை மோசமாக்குகிறது.

பெரியவர்களில் நான்கில் ஒருவர் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இளம் பருவத்தினரில் 5 முதல் 15% வரை தனிமையை எதிர்கொள்வதாகவும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது.

இவர்கள் தவிர, குறிப்பிட்ட குழுக்களும் தனிமையாக மாறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளன.

புலம்பெயர்ந்தோர், இன சிறுபான்மையினர், அகதிகள், LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களை கொண்டவர்கள் ஆகியோருக்கு இது பொருந்தும்.

Getty Images
தனிமையை வெல்வது எப்படி?

சமீபத்திய ஆண்டுகளில், பல அரசாங்கங்கள் தனிமை எனும் தொற்றுநோயைச் சமாளிக்க முயன்று வருகின்றன.

சுகாதார சேவைகள், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் இந்த நிகழ்வின் காரணமாக ஏற்படும் அதிகபடியான செலவுகள் தெளிவாகத் தெரிய தொடங்கிய போது, இது அரசியல் தளத்திலும் விவாதப் பொருளானது.

இந்த சூழலில் தன்னார்வத் தொண்டு தனிமைக்கு ஒரு பயனுள்ள தடுப்பு உத்தியாக இருக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

ஹாங்காங்கில், சமூக சேவையில் ஈடுபட்டு வரும் 375 தன்னார்வலர்களை சோதித்து பார்த்ததில், நீங்கள் நம்பும் ஒரு காரணத்திற்காக உங்கள் ஓய்வு நேரத்தை நன்கொடையாக வழங்குவது தனிமையைத் தணிக்கும், குறிப்பாக வயதானவர்களுக்கு என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் வித்தியாசமான அணுகுமுறையை எடுத்து வருகின்றன. தலைமுறைகளுக்கு இடையேயான பரிமாற்றத்தை அவை ஊக்குவிக்கின்றன.

மூத்த மற்றும் இளைய தலைமுறையினர் சமூக மையங்கள் அல்லது குடியிருப்புப் பகுதிகளின் பொது இடங்களில் ஒன்றாக சந்தித்து கலந்துரையாட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இங்கிலாந்தில் மருத்துவர்கள் "சமூக பரிந்துரை"யை நோயாளிகளுக்கு வழங்குகின்றனர்.

மருந்துகளை பரிந்துரைப்பதற்குப் பதிலாக, மக்களை இணைக்கும் சேவைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை ஊக்குவிப்பதே சமூக பரிந்துரையாகும். டீக்கடைகள், பார்கள், கைவினை வகுப்புகள் அல்லது பிற சமூக நிகழ்வுகளில் மக்கள் சந்திக்க சொல்கின்றனர்.

குழந்தை மற்றும் இளம்பருவ மனநல மருத்துவர் ஹோலன் லியாங், ஒரு சமூக கண்ணோட்டத்தில், சகிப்புத்தன்மையும் ஒத்துழைப்பும் கொண்ட சமூகங்களை வளர்ப்பது, அனைவருக்கும் ஒரு இடமும் நோக்கமும் கொண்ட சமூகத்தை உருவாக்குவது தனிமையை போக்க மற்றொரு பயனுள்ள உத்தி என்று விளக்குகிறார்.

"உங்களைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் விசாரிப்பது, கருணையை ஊக்குவிப்பது, மற்றவர்களுக்கு உதவுவது ஆகியவை தனிமையைத் தடுக்க உதவும்" என்று லியாங் கூறுகிறார் .

தனிப்பட்ட கண்ணோட்டத்தில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த உறவுகள் மற்றும் நட்புகள் திருப்திகரமான தரத்தில் உள்ளனவா என்று கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

Getty Images

தொடர்ச்சியான சோக உணர்வுகள், சமூக தொடர்புகளை கொள்ள அல்லது வீட்டை விட்டு வெளியேற விருப்பமின்மை போன்ற தனிமையின் அறிகுறிகளைக் கவனிப்பது அவசியம்.

பற்றின்மை உணர்வு - அதாவது, மற்றவர்களுடன் அல்லது உங்களைச் சுற்றியுள்ள இடங்களுடன் ஒன்றிணையாமல் இருப்பது எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.

தனித்திருத்தல் பற்றி சமூகத்தில் எதிர்மறையான பார்வை இருக்கிறதா?

ஒரு சமூக இனமாக, மனிதர்கள் உயிர்வாழ சில சமூக விதிகளைப் பின்பற்றும் ஒரு ஒத்திசைவான குழுவாக இருக்க விரும்புகிறவர்கள் என்று பேராசிரியர் நுயென் சுட்டிக்காட்டுகிறார்.

இதன் விளைவாக, "சமூக தொடர்புகள் மற்றும் ஒன்றாக இருப்பதன் முக்கியத்துவத்தை நாம் முன்னிலைப்படுத்த முனைகிறோம்" என்று ஆராய்ச்சியாளர் சுட்டிக்காட்டுகிறார்.

"அந்த அர்த்தத்தில், தனிமை குறித்த எதிர்மறையான பார்வை நிலவுகிறது" என்று நுயென் கூறுகிறார்.

ஆனால் தனிமையின் உடனடி விளைவுகளில் ஒன்று அமைதி என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

பிரிட்டனில் உள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், தனித்திருத்தலின் நன்மைகளையும் தீங்குகளையும் கொண்டு வரக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட 178 பேரை 21 நாட்கள் கண்காணித்தனர். அந்த நேரத்தில், பங்கேற்பாளர்கள் மன அழுத்தம், வாழ்க்கை திருப்தி, சுயாட்சி , தனிமை ஆகியவற்றை அளவிட நாட்குறிப்புகள் மற்றும் கேள்வித்தாள்களை பூர்த்தி செய்தனர்.

தனியாக அதிக நேரம் செலவிடுவது குறைந்த மன அழுத்தத்துடனும் , நீங்களே தேர்ந்தெடுப்பதற்கும் நீங்களே இருப்பதற்குமான சுதந்திர உணர்வுடனும் தொடர்புடையது என்று அந்த சோதனை கண்டறிந்துள்ளது - ஆசிரியர்களின் கூற்றுப்படி, இவை தனித்திருத்தலின் "அமைதியான விளைவுகள்" ஆகும்.

இருப்பினும், சமூகத்திலிருந்து அதிக மணிநேரம் தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில், பங்கேற்பாளர்கள் தனிமை உணர்வு அல்லது வாழ்க்கையில் குறைந்த திருப்தியை தெரிவித்தனர்.

தனித்திருத்தலின் அர்த்தமுள்ள தருணங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது? Getty Images

தனித்திருத்தல் உணர்ச்சிகளை ஒழுங்கமைப்பதற்கான இடத்தையும் , சுதந்திரம் மற்றும் சுயாட்சி உணர்வையும் வழங்குகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன.

அதிகரித்த மன அழுத்தத்தின் போது அல்லது ஒரு குறிப்பிட்ட நாளில் நிறைய நடக்கிறது என்று நீங்கள் உணரும்போது தனித்திருக்கும் தருணங்கள் பயனுள்ள கருவியாக இருக்கலாம்.

இந்த அர்த்தத்தில், மனநலக் கண்ணோட்டத்தில் தனித்திருத்தல் நல்லது. ஆனால் தனியாக நேரத்தை செலவிடுவது சிலருக்கு மிக கடினமாக இருக்கும்.

பேராசிரியர் நுயென் நீங்கள் தனித்திருத்தல் ஒரு பழக்கமாகும் வரை, தனித்திருக்கும் நேரத்தை படிப்படியாக உருவாக்க பரிந்துரைக்கிறார்.

"தனித்திருத்தலை எவ்வாறு அதிகம் பயன்படுத்துவது என்று மக்கள் என்னிடம் கேட்கும்போதெல்லாம், நான் பரிந்துரைக்கும் ஒரு விஷயம், ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் தனித்திருக்க தொடங்குவது" என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இந்த குறுகிய காலங்களில், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதை மதிப்பிடலாம். நாட்கள் செல்லச் செல்ல, இந்த நேரத்தை அதிகரிக்கலாம்.

"சில நேரங்களில் மக்கள் கழிவுகள் நீங்கும் செய்முறை ஒன்றை தொடங்க விரும்புகிறார்கள், திரை நேரம் (screentime) அல்லது சமூக ஊடக பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க முடிவு செய்கிறார்கள். இது மிகவும் சங்கடமாக இருக்கலாம், எதிர்காலத்தில் அதை மீண்டும் செய்ய நீங்கள் விரும்ப மாட்டீர்கள், "என்று அவர் கூறுகிறார்.

தனிமைக்கு ஓர் எல்லை உண்டா?

மேலே மேற்கோள் காட்டப்பட்ட ரீடிங் பல்கலைக்கழக ஆய்வில், மக்கள் தனிமையில் அதிக நேரம் செலவழிக்கும் நாட்களில் தனிமையாகவும் குறைந்த திருப்தியுடனும் உணர்ந்ததாகக் கண்டறியப்பட்டது.

நுயெனைப் பொருத்தவரை, சரியான சமநிலை மணிநேரங்களில் அளவிடப்படக்கூடாது, மாறாக தரத்தின் அடிப்படையில் அளவிடப்பட வேண்டும்.

நாம் விழித்திருக்கும் நேரத்தில் 75% தனியாக இருக்கும்போது தனிமை தொடங்குகிறது என்று சில ஆராய்ச்சி காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"ஆனால் இது உண்மையில் தனிநபர் மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது" என்று அவர் நம்புகிறார்.

சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட இந்த நேரத்தில் என்ன செய்வது?

தூண்டுதலளிக்கும் ஆனால் ஓய்வு மற்றும் ஆசுவாசம் வழங்கும் செயல்பாடுகளைக் கண்டறிய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வாசிப்பு, தோட்டக்கலை, இயற்கையில் நடைப்பயிற்சி செய்வது, இசை கேட்பது, சமையல் மற்றும் கைவினை போன்ற பல பொழுதுபோக்குகளும் செயல்பாடுகளும் தனித்திருத்தலின் போது செய்யக்கூடியவை ஆகும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.