மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட கிரிஷ் ஷிண்டே என்ற குற்றவாளி, போலீஸ் காவலில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிச் சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். செவ்வாய்க்கிழமை மாலை பத்ரகாளி காவல் நிலையத்திற்கு வெளியே போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடிய அவர், தனது நண்பர் கிரண் பர்தேஷி ஸ்கூட்டரில் காத்திருந்ததை பயன்படுத்தி தப்பினார்.
இந்த நிகழ்வு காவல் நிலையம் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், கிரிஷ் ஷிண்டே ஓடிவந்து ஸ்கூட்டரில் ஏற, நான்கு போலீசாரும் அவரை துரத்துவதும், ஒருவர் சாலையில் விழுவதும் தெளிவாகக் காணப்படுகிறது. இந்த சம்பவம் நாசிக் காவல் துறையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் இரவு முழுவதும் வலை வீசி தேடுதல் வேட்டை நடத்தினர்.
இறுதியாக, நாசிக் – மும்பை நெடுஞ்சாலையின் கசாரா பகுதியில் இருந்து வெறும் 12 மணி நேரத்தில் கிரிஷ் ஷிண்டேவை மீண்டும் கைது செய்தனர். அவருடன் தப்பிக்க உதவிய கிரண் பர்தேஷியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்ரகாளி பகுதி தபோவன் அருகே ஒருவரை கோடரியால் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிஷ் ஷிண்டே, நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நான்கு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் தப்பியோடியதை குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.