தங்கத்தை விற்க இனி கடைக்கு போக வேண்டாம்.. அதற்கும் வந்துவிட்டது மிஷின்..!
Tamil Minutes April 22, 2025 01:48 AM

 

நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் என்றால் கடைக்கு கொண்டு செல்ல வேண்டும், அவர்கள் உரசி தங்கத்தின் தரத்தை சோதனை செய்து அதன் பின் எடை போட்டு, அதற்குரிய பணத்தை வழங்குவார்கள். அதுவும் பழைய தங்கத்தை மார்க்கெட் விலைக்கு வாங்காமல் அதைவிட குறைவான விலைக்கு வாங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பிரச்சனை இல்லாமல் தங்கத்தை விற்க, ’தங்க விற்பனை மிஷினை’ சீனா அறிமுகம் செய்துள்ளது.

சீனாவின் ஷாங்காயில் தங்க விற்பனை மிஷின் நிறுவப்பட்டுள்ளது. இந்த மிஷின் தங்கத்தை உருக்கி அதன் தூய்மையும் எடையையும் மதிப்பீடு செய்து, அதன் பின்னர் அந்த மதிப்பிற்கேற்ப பணத்தை 30 நிமிடங்களில் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது. இதில் எந்தவிதமான ஆவணங்களும் தேவைப்படவில்லை.

இந்த மிஷினை சீனாவின் Kinghood Group அறிமுகம் செய்துள்ளது. இந்த தங்க விற்பனை மிஷின் ஷாங்காயில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 3 கிராம் எடையுடைய, குறைந்தது 50 சதவீத தூய்மையுள்ள தங்க பொருட்களை ஏற்கும் வகையில் இந்த மிஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மிஷினை பயன்படுத்த பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் தங்க நகைகளை விற்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதைப் பயன்படுத்த முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு டெமோ நிகழ்வின் போது, 40 கிராம் தங்க நகையை கிராமுக்கு 785 யுவான் (சுமார் ரூ.9,200) மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்படி மொத்தமாக 36,000 யுவானுக்கும் (சுமார் ரூ.4.2 லட்சம்) அதிகமான தொகை, 30 நிமிடங்களில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“தங்க ஏ.டி.எம்-களின் அறிமுகம் ஒரு மறுசுழற்சி நோக்கத்தில் வர்த்தக ரீதியாக உருவாக்கப்பட்டது. தங்க விலை அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு பெரிதாக உயர்ந்துள்ளது. இதனால் பணமாக மாற்றும் விருப்பமும் அதிகரித்துள்ளது,” என்று ஷாங்காய் தங்க சங்கத்தின் உறுப்பினர் Xu Weixin கூறியுள்ளார்.

இந்த மிஷின் மேலும் சில சீன நகரங்களில் எதிர்காலத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு மிஷின் இந்தியாவுக்கு வந்தால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.