தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனி, தாய் நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தங்கராஜ். சங்கு குளி மீனவரான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், தங்க ராஜ் கிடைத்த வேலைக்கு சென்றுவிட்டு தினமும் ஏதாவது ஒரு இடத்தில் படுத்து தூங்குவது வழக்கம். அதன் படி தங்கராஜ் நேற்று முன்தினம் இரவு திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகில் படுத்து தூங்கியுள்ளார்.
ஆனால், தங்கராஜ் நேற்று அதிகாலை பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தங்கராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.