கள்ளக்குறிச்சியில் தனியார் கிளினிக் பெண் செவிலியர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வீட்டுக்கு ஒரு ஆள் கட்டாயம் கள்ளக்குறிச்சிக்கு போக வேண்டும் என்று உயிரிழந்த செவிலியரின் சொந்த ஊரில் தண்டோரா போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
கள்ளக்குறிச்சி நகரில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றில், அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சூரியகலா என்ற பெண் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில், இவரது சொந்த ஊரில் ஒருவர் இன்று காலை தண்டோரோ போட்டுள்ளார். அப்போது அவர், நமது அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சூரியகலா என்ற இளம்பெண்ணை அடித்து, துன்புறுத்தி தூக்குமாட்டி விட்டார்கள். நம்ம ஊரிலிருந்து வீட்டுக்கு ஒரு ஆள் கட்டாயமாக கள்ளக்குறிச்சிக்கு போக வேண்டும். அதனால், அசகளத்தூர் மாரியம்மன் கோயில் முன்னாள் டாட்டா ஏசி வாகனம் வந்து நிற்கும். ஒன்பது மணிக்கெல்லாம் கள்ளக்குறிச்சிக்கு போயாக வேண்டும் டும் டும் டும் டும் என்று தண்டோரா போட்ட வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.