AI வருகை :31 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்ட குற்றவாளி!
Newstm Tamil April 23, 2025 08:48 AM

அரக்கோணம் போலீஸ் சப்-டிவிஷனில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர் சித்திக். அரக்கோணம் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் தலைமறைவான நபர் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு குறித்து போலீசார் மேலும் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். அதில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சவுத்ரி என்பவர் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி ஜெயஸ்ரீ. இந்த தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சவுத்ரி, மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, கேரள மாநிலம் கொச்சி கடற்படையில் வேலை செய்யும் நபரான பாஸ்கர் ஜோதி கோகாய் என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, இருவரும் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி ஜெயஸ்ரீயை எரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், பாஸ்கர் ஜோதி கோகாய் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து சவுத்ரி, ஜெயஸ்ரீ தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் செய்தார். அப்போது டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயஸ்ரீயை எரித்து கொலை செய்தது தெரிய வந்தது.

இயைதடுத்து போலீசார் சவுத்ரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான பாஸ்கர் ஜோதி கோகாயை தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் பாஸ்கர் ஜோதி கோகாய் குறித்து பல்வேறு இடங்களில் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது பாஸ்கர் ஜோதி கோகாய் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அசாம் மாநிலத்திற்கு சென்று அந்த மாநில போலீசாருடன் இணைந்து பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. ஆனால், பாஸ்கர் ஜோதி கோகாயின் சொந்த மாவட்டம் திப்ரூகர் என்பதால், சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பட்டியலை வைத்து விசாரணையை துவக்கினர்.

அதில், சுமார் 1,500 பேர் பாஸ்கர் ஜோதி என்ற பெயரில் இருந்தனர். இவர்களின் முகவரியை வைத்து விசாரித்த போது கொலையாளி பாஸ்கர் ஜோதியை அரக்கோணம் போலீசார் மேலும் நெருங்கினர். ஆனால், பாஸ்கர் ஜோதி கோகாய் தற்போது எப்படி இருப்பார்? என தெரியவில்லை. இதனால், கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களில் இருந்த பாஸ்கர் ஜோதி கோகாய்யின் 21 வயது புகைப்படத்தை வைத்து ஏஐ தொழில்நுட்பம் மூலம் தற்போது எப்படி இருப்பார்? என வரையப்பட்டது.

பின்னர் அந்த புகைப்படத்தை வைத்து திப்ரூகர் மாவட்டத்தில் வீடு வீடாகவும், பல்வேறு இடங்களில் காட்டியும் பாஸ்கர் ஜோதி கோகாய்யை தேடினர். அதில் ஏஐ போட்டோவுடன் ஒத்து போன ஒரு பாஸ்கர் ஜோதி கோகாய்யை பிடித்து விசாரித்தனர். அவர், தற்போது டியூசன் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அவரிடம் துருவி துருவி நடத்திய விசாரணையில் ஜெயஸ்ரீயை கொலை செய்த பாஸ்கர் ஜோதி கோகாய் அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார், பாஸ்கர் ஜோதி கோகாயை கைது செய்து அசாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை அரக்கோணம் தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, பாஸ்கர் ஜோதி கோகாய்யை அரக்கோணம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

31 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலையாளி 100 நாட்கள் தொடர் விசாரணைக்குப் பின் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் முகத்தை வரைந்து வாக்காளர் பட்டியலில் ஒப்பிட்டு போலீசார் கைது செய்திருப்பது வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மேலும் அவரை அரக்கோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்காக அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மற்றும் தனி படையினரை எஸ்பி விவேகானந்த சுக்லா வெகுவாக பாராட்டினார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.