மனதை உலுக்கும் புகைப்படம்..! "இந்து என்ற ஒரே காரணத்துக்காக சுட்டுக்கொன்றனர்"...!
Newstm Tamil April 23, 2025 08:48 PM

பஹல்காம் பள்ளத்தாக்கானது அதன் பனிப்பொழிவு மற்றும் எழில்மிகு காட்சியால் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது.இந்தச் சூழலில், சுற்றுலா பயணிகள் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இன்பமாக பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு புதரில் ஒளிந்திருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த தொடங்கினர். இதை சற்றும் எதிர்பாராத சுற்றுலா பயணிகள் நாலாபுறமும் தெறித்து ஓடத் தொடங்கினர்.


தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் ரத்தக் களறியுடன் குற்றுயிரும் குலையுயிருமாக சரிந்து உயிரிழந்தனர். தாக்குதல் நடைபெற்ற பகுதி திறந்தவெளி என்பதால், பலரும் தங்களது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். இதில் ஒருசிலர் கீழே விழுந்தும் காயமடைந்தனர்.


இதனிடையே, பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தனது கணவரின் சடலம் அருகே மனைவி சோகமே உருவாக அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. தாக்குதலில் தனக்கும் காயம் ஏற்பட்ட போதிலும், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் தனது கணவரின் உடல் அருகே நீண்டநேரமாக மனைவி அமர்ந்து கண்ணீர்மல்க பார்த்துக் கொண்டிருந்தது காண்போரைக் கண்கலங்கச் செய்தது.

பின்னர், இந்தத் தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண், பஹல்காம் பள்ளத்தாக்கில் குவிந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதுடன், இந்துக்களை மட்டுமே மையமாக கொண்டு இந்தத் தாக்குதலைத் தீவிரவாதிகள் நடத்தியதாக கண்ணீர்மல்க தெரிவித்தார். அந்த வகையில் தாங்கள் இந்து என்பதால், தனது கணவரின் நெற்றியில் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அந்தப் பெண் வேதனையுடன் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.