அதிமுகவும் பாஜகவும் இணைந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். அதேசமயம் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் விலகி வருகின்றனர். அதே நேரத்தில் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் விலகுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து முதல் கட்சியாக SDPI அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இரவு விருந்து அளித்தார். பாஜக கூட்டணியால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்யவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில் சிக்கன், மட்டன் பிரியாணி, மீன், முட்டை, இறால் என ஆறு வகை அசைவ உணவுகளுடன் ஈபிஎஸ் அளித்த இந்த விருந்தில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்த செங்கோட்டையன் இன்று நடைபெற்ற விருந்தையும் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.