எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து... செங்கோட்டையன் புறக்கணிப்பு!
Dinamaalai April 24, 2025 03:48 AM

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தனது இல்லத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி இன்று விருந்து வழங்குகிறார். இந்நிலையில், செங்கோட்டையன் புறக்கணித்தது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. சமீபத்தில் சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததை அடுத்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அ.தி.மு.க. எம்எல்ஏ.க்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று விருந்து வழங்குகிறார். இந்த விருந்தில் அதிமுக  முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை பேசுவதை செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் ஈரோட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தனர். அந்த வழியில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்தார்" என்று புகழ்ந்து பேசினார்.

இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி வழங்கும் விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.