பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் நேற்று (ஏப். 22) சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இது மிக மோசமான ஒன்றாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கடற்படை அதிகாரி மற்றும் உளவுத்துறையை சேர்ந்த ஒருவரும் இந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் கால்நடையாகவோ அல்லது குதிரை மூலமாகவோ தான் செல்ல முடியும். எனவே ஹெலிகாப்டர்கள் மூலம் அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் தென் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அடக்கம். தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஷ்வரன், சந்துரு (83), பாலசந்திரா (57) ஆகிய மூன்று படுகாயம் அடைந்திருப்பதாகவும் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த ஒரு குடும்பமும் இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மஞ்சுநாத் என்பவரின் மனைவியும் மகனும் உயிர் தப்பிய நிலையில், அவர்கள் கன்னட ஊடகம் ஒன்றுக்கு கண்ணீர் மல்க அளித்த பேட்டியில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
பல்லவி மற்றும் அவரது 18 வயது மகனின் கண் முன்னே அவரது கணவர் மஞ்சுநாத் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். அப்போது, கணவரை கொன்றதை போல் தங்களையும் கொன்றுவிடும்படி பல்லவி பயங்கரவாதிகளிடம் மன்றாடி அழுது ஓலமிட்டுள்ளார். ஆனால், பயங்கரவாதிகள் அவரிடம், நாங்கள் உன்னை காயப்படுத்த மாட்டோம் என கூறிவிட்டு, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் போய் சொல்... என கூறிவிட்டு சென்றதாக பல்லவி தெரிவித்தார்.
தொலைப்பேசி வாயிலாக கன்னட ஊடகம் ஒன்றில் பேசிய பல்லவி,"நாங்கள் பஹல்காமில் இருக்கிறோம். என் கணவர் என் கண் முன்னே கொல்லப்பட்டார். எனக்கு அழவோ எதிர்வினையாற்றவோ முடியவில்லை. என்ன நடந்தது என்று எனக்குப் புரியவே இல்லை. கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த எனது கணவர் மஞ்சுநாத், எங்களது மகன் அபிஜேயாவுடன் நான் இங்கு வந்திருந்தேன்.
என்னுடன் என் கார் டிரைவரும் இருந்தார். அவர் ஒரு நல்ல மனிதர். இந்த தாக்குதலில் இந்துக்கள் குறிவைக்கப்படுவதாக அவர் என்னிடம் கூறினார். 'பிஸ்மில்லாஹ்' என்று தொடர்ந்து கூறி வந்த மூன்று பேர், நாங்கள் பாதுகாப்பாக தப்பிக்க உதவினார்கள். என் கணவரின் உடலை விமானம் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் மூவரும் ஒன்றாகத் திரும்ப வேண்டும்," என்றார்.
"3-4 பயங்கரவாதிகளை நான் கவனித்தேன். என் கணவர் கொல்லப்பட்ட பிறகு, பயங்கரவாதிகளில் ஒருவரை பார்த்து, 'நீ தான் என் கணவரைக் கொன்றாய், என்னையும் கொன்றுவிடு' என்று சொன்னேன். என் மகனும் அந்த பயங்கரவாதியை பார்த்து, 'நீ தான் என் தந்தையை கொன்றாய், எங்களையும் கொன்றுவிடு' என்று சொன்னான். அதற்கு அவர்கள் 'நான் உன்னைக் கொல்ல மாட்டேன். போய் மோடியிடம் சொல்...' என்றார்". பல்லவியும் அவரது மகனும் இந்தியில் பயங்கரவாதியிடம் பேசிய நிலையில், பயங்கரவாதியின் பதிலும் இந்தியில் வந்துள்ளது.
"பயங்கரவாதிகள் எங்களுக்கு முன்னிருந்து வந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இல்லை. எல்லா ஆண்களும் தாக்குதலில் குறிவைக்கப்பட்டனர். அங்கு புதுமண தம்பதிகள் பலர் இருந்தனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஜோடிகளில் ஆண்கள் மட்டுமே தாக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்துக்கள் குறிவைக்கப்பட்டனர். அங்கு சுமார் 500 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்.
நாங்கள் அங்கு குதிரையில் சென்றிருந்தோம். என் மகன் காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை, அதனால் என் கணவர் ரொட்டி வாங்கச் சென்றார். முதலில், துப்பாக்கிச் சத்தம் கேட்டது, ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நினைத்தோம். பின்னர் மக்கள் ஓடத் தொடங்கினர். என் கணவர் ஏற்கனவே சரிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டேன். அவர் தலையில் சுடப்பட்டிருந்தார். நான் ஒன்றும் செய்ய முடியாமல் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்துவிட்டேன்.
நான் எனது சொந்த ஊரான சிவமொக்காவுக்குத் திரும்பிப் போக விரும்புகிறேன், ஆனால் தனியாக இல்லை. நான் என் கணவரின் உடலுடன்தான் திரும்பிச் செல்வேன். நாங்கள் மூவரும் ஒன்றாகத் திரும்பிச் செல்ல வேண்டும். தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.