ஜம்மு காஷ்மீரில் இன்னும் 6 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்!
Newstm Tamil April 23, 2025 08:48 PM

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மூன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சர், செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில், பஹல்காம் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் காஷ்மீர் தாக்குதல் விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.