'சச்சின்' ரீ ரிலீஸிலும் ரசிகர்களின் ஹார்டின்ஸை அள்ளியிருக்கிறது. கூடவே நாஸ்டால்ஜியா நினைவுகளையும் மீண்டும் நம் கண் முன் நிறுத்தியிருக்கிறது. இந்த ரீ ரிலீஸில் மூலம் தற்போது ஒருவர் வைரலாகிக் கொண்டிருக்கிறார்.
ஆம், ஷாலினி கதாபாத்திரத்தின் தோழியாக வருவாரே ஸ்மிருதி, அவருடைய கேரக்டரின் காட்சிகளைதான் இப்போது கட் செய்து வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
படத்தில் ஷாலினியின் துனையாக ஸ்மிருதி, அவருடைய முடிவுகளுக்கு வழிகாட்டுவார். ஸ்மிருதியின் உண்மையான பெயர் ராஷ்மி.
தற்போது அவர் வியாட்நாமில் வசித்து வருகிறார். 'சச்சின்' படத்திற்குப் பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்காத இவர் தற்போது ஒரு பிசினஸையும் அங்கு நடத்தி வருகிறார்.
அவரைத் தேடிப் பிடித்து தொடர்புக் கொண்டு பேசினோம்.
ராஷ்மி பேசுகையில், "'சச்சின்' படத்தோட ரீ-ரிலீஸில் என்னுடைய கதாபாத்திரத்தை அடையாளப்படுத்தி ட்ரெண்ட் பண்றாங்க. 2005-ல் இப்படியான விஷயங்கள் எல்லாம் நடக்கும்னு நிச்சயமாகவே எதிர்பார்த்திருக்க மாட்டோம்.
இந்த ட்ரெண்ட் எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸான விஷயம். 'சச்சின்' படத்தோட வாய்ப்பு எனக்கு அதிர்ஷ்டமாகக் கிடைச்சதுதான்.
திடீரென ஒரு நாள் தாணு சார் ஆபீஸ்ல இருந்து எனக்கு கால் வந்தது. மற்றபடி சினிமாவுக்கு வரணும்னு நான் எந்த முயற்சிகளும் எடுக்கல.
அந்தப் படத்துக்கு முன்னாடி நான் சில விளம்பரங்கள்ல நடிச்சிருந்தேன். அதன் பிறகுதான் 'சச்சின்' வாய்ப்பு எனக்கு வந்தது.
'சச்சின்' படத்துல நடிக்கும்போது நான் ரொம்பவே சின்னப் பொண்ணு. அப்போ நான் படிச்சிட்டு இருந்தேன்.
அந்த சமயத்துலதான் இத்தனை பெரிய நடிகர்கள் நடிச்ச இந்தப் படத்துல வாய்ப்பு கிடைச்சது.
படப்பிடிப்பு தளத்துல என்னைச் சுற்றி பெரிய நடிகர்கள் இருப்பாங்க. நடுவுல நான் மட்டும் சின்னப் பொண்ணா அங்க இருப்பேன். தயாரிப்பு தரப்புல இருந்தும் அப்போ நல்லபடியாக என்னைக் கவனிச்சுக்கிட்டாங்க.
'சச்சின்' படத்துல வர்ற என்னுடைய ஸ்மிருதி கதாபாத்திரத்தை எல்லோராலையும் கனெக்ட் பண்ணிக்க முடியும்.
ஷாலினிக்கு ஸ்மிருதி மாதிரி எல்லோருக்குமே ஒரு தோழி இருப்பாங்க. வாழ்க்கையில இந்த மாதிரியான முடிவுகளைத்தான் எடுக்கணும்னு வழிகாட்டியாகவும் இருப்பாங்க," என்றார்.
மொத்தப் படக்குழுவினரைப் பற்றி பேசுகையில், "ஜெனிலியா ரொம்பவே ஸ்வீட்! எப்போதும் அவங்ககிட்ட ஒரு பாசிடிவிட்டி இருக்கும்.
அப்போ நான் சின்னப் பொண்ணுங்கிறதுனால எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. அந்த மாதிரியான சமயத்துல ஜெனிலியா நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுப்பாங்க.
முக்கியமாக, என்னுடைய தொடக்க காலத்திலேயே 'சச்சின்' திரைப்படம் எனக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கு.
வாழ்க்கையில் எப்படி நாம எவ்வளவு பணிவாகவும் ஒத்துழைப்புடனும் இருக்கணும்னு எனக்கு அந்தப் படம்தான் கற்றுக் கொடுத்துச்சு.
நான் அந்தப் படத்துல நல்லா நடிச்சிருந்ததாகச் சொன்னாங்க.
ஆனால், இயக்குநர்தான் என்னை அந்த மாதிரி நடிக்க வச்சாரு. எனக்கு நிறைய விஷயங்களையும் அவர் வழிகாட்டினாரு.
விஜய் சார் எப்போதும் ரொம்ப அமைதியாகவும் எளிமையாகவும் இருப்பாரு.
வேகமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டு அவருடைய டேக் சீக்கிரமாகவே முடிச்சிடுவாரு. என்னுடைய தம்பி விஜய் சாருடைய மிகப்பெரிய ரசிகன். நான் ஒரு நாள் விஜய் சார்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன்.
அப்புறம் என் தம்பியைக் கூட்டிட்டுப் போய் அவர்கூட போட்டோவும் எடுத்துக்கிட்டோம்.
படப்பிடிப்பு தளம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். வடிவேலு சார் இருக்கும்போது எல்லோரும் சிரிச்சுக்கிட்டே இருப்போம்.
வடிவேலு சாருடைய முகபாவனையும், அவர் நடிக்கிற ஸ்டைலிலேயே நமக்கு சிரிப்பு வந்திடும். படத்துல ஒரு காட்சியில வடிவேலு சார் முகத்துல ஜூஸ் ஊத்தணும்.
அப்போ டீம்ல இருந்து அந்தக் காட்சியை ஒரே டேக்ல முடிக்கச் சொன்னாங்க. ஜூஸை மீண்டும் மீண்டும் ஊத்த முடியாதுனு ஒரே டேக்ல முடிக்கச் சொன்னாங்க. அப்படி அந்தக் காட்சியை ஒரே டேக்ல பண்ணினோம்," என்றார்.
அவரிடம் "அந்தக் காட்சியில ஜெனிலியா ஊற்றிய ஜூஸ் டம்ப்ளர் மூடி வடிவேலு சார் முகத்துல பட்டதாமே..." எனக் கேட்டதும், "ஆமா (சிரிக்கிறார்), வடிவேலு சார் என்ட்ரி கொடுக்கும்போதே ஒரு ஃபன்னியான சவுண்ட் வரும்.
சுத்தி சுத்தி ஃபன் பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க. படத்துல எங்களுடைய அத்தனை காட்சிகளிலும் ஸ்மோக் எஃபெக்ட் இருக்கும்.
எந்த நேரத்திலும் அந்த புகையும் காற்றும் தயாராக இருக்கும். களத்துக்கேத்த மாதிரியான உணர்வைக் கொடுக்கணும்னு படம் முழுக்க அதைப் பண்ணினாங்க," என்றவர் "'சச்சின்' கதாபாத்திரமே ஒரு தனித்துவமான கதாபாத்திரம்.
ரொம்பவே அன்பு செலுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரமே ஒரு மாதிரி கூலாக இருக்கும்.
குழந்தைகள்கிட்ட அன்பு செலுத்துற மாதிரியான விஷயங்கள் அந்தக் கதாபாத்திரம் எவ்வளவு உண்மையான மனிதன்னு எடுத்துரைக்கும்," என்றவரிடம் தற்போது ராஷ்மி என்ன செய்துக் கொண்டிருக்கிறார் எனக் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர், "'சச்சின்' படத்துக்குப் பிறகு நான் எந்தப் படங்களிலும் நடிக்கல. அதன் பிறகு என்னுடைய படிப்புல கவனம் செலுத்தத் தொடங்கிட்டேன். இப்போ வியட்நாம்ல வசிக்கிறேன்.
இங்க இப்போ சின்னதாக ஒரு பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். இந்தியன் ஹேண்டிகிராஃப்ட்ஸ் பொருள்களை இங்க விற்பனை செய்யுறேன்," எனக் கூறி முடித்துக் கொண்டார்.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK