பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இரண்டு மணி நேர விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டத்தில் ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கேபினெட் கூட்டத்தின் முடிவுகள் குறித்து வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரா அளித்த பேட்டியில், “இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதை கைவிடும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும். பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது. தகுந்த ஒப்புதல்களுடன் எல்லையை கடந்து சென்றவர்கள் மே 1, 2025 க்கு முன்பு அந்த பாதை வழியாக திரும்பலாம்.
பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. SVES விசாவின் கீழ் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் அனைவரும் உடனே வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
SAARC விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதி இல்லை. SVES விசாவில் இந்தியாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும். பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1க்குள் டெல்லியில் இருந்து வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனே இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் ” என்று தெரிவித்தார்.
பஹல்ஹாம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பான லஸ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பாக செயல்படும் தி ரெசிடெண்ட் ப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கியமான ஐந்து அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது உலக அரங்கில் உற்று நோக்கக்கூடியதாக மாறியுள்ளது.