ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கு சம்பந்தமே இல்லை - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்..!
Newstm Tamil April 24, 2025 12:48 PM

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பொறுப்பேற்றுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தான் தரப்பு தற்போது மௌனம் கலைத்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். "பாகிஸ்தான் நாட்டிற்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்றார். 

மேலும் அவர்,"இந்தியாவில் நாகாலாந்து, மணிப்பூர், காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்களை மத்திய அரசு எதிர்கொள்கிறது. மத்திய அரசு பலரையும் சுரண்டி வருவதால் இது உள்நாட்டில் இந்த மனநிலை வளர்க்கப்படுகிறது. நாங்கள் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை.

மேலும், பயங்கரவாதிகளுக்கு இலக்காக உள்ளூர்வாசிகள் இருக்கக்கூடாது, அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், உள்ளூர் படைகள் இந்திய அரசை குறிவைக்கும்பட்சத்தில், உடனே அரசு பாகிஸ்தான் மீது பழிப்போட அது எளிதாகிவிடும். 

இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகளின் உயிர்கள் பறிபோனது குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். இறந்தவர்களின் உறவினர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

விடுமுறை காரணமாக பஹல்காம் நகரத்திற்கு ஏராளமானோர் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, ஹனிமூனுக்கு அங்கு பல புதுமண ஜோடிகள் வந்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமா பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலுக்கு பிறகு அங்கு நடந்த பயங்கர தாக்குதல் இதுதான். 

ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 2 பேரும் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். உள்ளூர்வாசிகள் இருவரும் உயிரிழந்தனர். கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்களும் தாக்குதலில் உயிரிழந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இருவர், குஜராத்தை சேர்ந்த ஒருவர் உள்ளிட்டோர் தாக்குதலில் காயமடைந்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.