ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி- வாகா எல்லையை உடனடியாக மூடுதல் என ஐந்து முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தானும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
இன்று (ஏப். 24) பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது.
பஹல்காமில் தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒருதலைபட்சமானது, அநியாயமானது என்றும் மிகவும் பொறுப்பற்றது, அரசியல் ரீதியானது என்றும் அந்த கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆகிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இந்தியாவின் நடவடிக்கைகள்ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சௌதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோதி, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் புதன்கிழமை (ஏப்ரல் 23) அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப் பின், பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இந்தியாவின் இந்த முடிவுகள் பற்றிப் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவுக்கு உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசினார்.
அப்போது இந்தியா எடுத்த ஐந்து முக்கிய முடிவுகளை பற்றி அவர் தெரிவித்தார். அவை,
அப்போது அவர், "தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக" கூறினார்.
அதோடு, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவு, நம்பிக்கை அளிக்கும் விதத்திலும், மாற்றமின்றியும் கைவிடும் வரை இது தொடரும் என விக்ரம் மிஸ்ரி கூறினார்.
"அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும். உரிய ஆவணங்களுடன் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்தவர்கள் மே 1ஆம் தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்."
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக விக்ரம் மிஸ்ரி விவரித்தார்.
"பாகிஸ்தான் குடிமக்கள் சார்க் விசா திட்டத்தின் கீழ் இனி இந்தியாவில் பயணிக்க முடியாது. இதற்கு முன்னதாகப் பெற்ற விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். இந்த விசாவின் கீழ் இந்தியாவுக்குள் வந்த அனைவரும் உடனடியாக, 48 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்" என்றார்.
"டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் கூறினார்.
"இதே போன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களுக்கான உதவி அதிகாரிகளின் பணியிடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்றார்.
"மே 1 ஆம் தேதி முதல் தூதரகங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 55இல் இருந்து 30 ஆக குறைக்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆலோசனைக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது" எனவும் அவர் கூறினார்.
"பஹல்காம் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
பிபிசி உருது செய்தியின்படி, பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்தபோது, இந்தியாவில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்துப் பேசும்போது, இந்தியா நீண்ட காலமாக அதிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் 100 சதவிகிதம் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.
பாலகோட் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் பறந்ததற்காக அபிநந்தன் பிடிபட்டதை இந்தியா நினைவில் வைத்திருக்கும் என அவர் கூறினார்.
மேலும், "பிரிவினைவாதிகளுக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது. பலுசிஸ்தானைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன," என அவர் தெரிவித்துள்ளார்.
"பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாகத் தானே பொறுப்பேற்க வேண்டும்" எனவும், "பஹல்காம் தாக்குதல் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட 'தவறான நடவடிக்கையாக' இருக்கவும் வாய்ப்புள்ளது" என்றும் அவர் கூறினார்.
"காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள், அங்கு பல்லாண்டுக் காலமாக இருக்கும் ஏழு லட்சம் வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று யாராவது இந்தியாவிடம் கேட்க வேண்டும்?" என்றும் அவர் பேசினார்.
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு உலகளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பிரதமர் நரேந்திர மோதியுடன் தொலைபேசியில் பேசினார்.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோதியை தொலைபேசி வாயிலாக அழைத்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
"அதிபர் டிரம்ப், இந்த தீவிரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நிற்கின்றன" என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு, டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "காஷ்மீரில் இருந்து வரும் செய்திகள் மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கின்றன. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். பிரதமர் மோதிக்கும் இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபமும் உண்டு" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியாவுக்கு நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உஷாவும் நானும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் அழகு மற்றும் அதன் மக்களால் நாங்கள் மெய்மறந்து இருக்கிறோம். இந்தக் கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன" என்று பதிவிட்டிருந்தார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவொரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்றும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேல் இந்தியாவுடன் துணை நிற்கும் என்றும் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு