அரியலூர் || பட்டா மாற்ற லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ அதிகாரி - அதிரவைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.!!
Seithipunal Tamil April 25, 2025 04:48 AM

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி அடுத்து குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு. இவர் பாப்பாக்குடி தெற்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயியான சுகுமார் என்பவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக கேட்டுள்ளார். 

அதற்கு செல்வராசு பட்டா மாற்றுவதற்கு ரூ.8 ஆயிரம் பணம் தர வேண்டும் என்றுக் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்க விருப்பமில்லாத சுகுமார் நடந்தது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் படி லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

அதன் படி அலுவலகத்திற்கு சென்ற சுகுமார் பணத்தை வி.ஏ.ஓ. செல்வராசிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வராசுவை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரிடமிருந்து ரூ.8 ஆயிரத்தை பறிமுதல் செய்து அலுவலகத்தில் தீவிர சோதனையும் நடத்தி, பட்டா மாற்றம் செய்வதற்காக நீண்ட நாட்களாக வைத்திருந்த சில ஆவணங்கள் மற்றும் மறைத்து வைத்திருந்த ரூ.11 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. செல்வராசு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.