திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி... மற்றொரு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து!
Dinamaalai April 25, 2025 01:48 AM

திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சியாக, மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் 6 மாதங்களுக்குள் வழக்கினை வேலூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது ரூ. 3.92 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி அந்த வழக்கில் துரைமுருகனை விடுவித்த வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது எனவும் துரைமுருகனை விடுவித்தது ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மற்றொரு வழக்கிலும் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் 2007-09 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக 2011-ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2017-ல் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கிலும் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் வேலூர் நீதிமன்றம் இந்த வழக்கினை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.