உதகையில் ஆளுநரால் நடத்தப்படும் துணை வேந்தர்கள் மாநாடு, ஏப்ரல் 25 துவங்கவுள்ள நிலையில், இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று (ஏப்ரல் 24) கோவை வந்தார்.
சாலை மார்க்கமாக காரில் உதகைக்குச் சென்ற ஆளுநருக்கு, கோவை விமான நிலையம் முன்பாக கருப்புக் கொடி காண்பிக்க முயன்ற திராவிடர் விடுதலைக்கழகம், தமிழ்ப்புலிகள் அமைப்புகளைச் சேர்ந்த 32 பேர் கைது செய்யப்பட்டனர். அதற்கு முன்பாக, இன்று காலையில், தமிழக ஆளுநரைக் கண்டித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடக்கவுள்ள ஆளுநர் மாளிகையை, ஏப்ரல் 25 காலை 11 மணியளவில், 20 அமைப்புகளுடன் இணைந்து முற்றுகையிடப்போவதாகவும், உதகை பேருந்து நிலையத்தில் இருந்து இதற்காக பேரணி நடத்தப்படுமென்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசனும் ஆளுநர் கூட்டியுள்ள துணை வேந்தர் மாநாட்டுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஆளுநர் மாளிகை விளக்கம்இதற்கிடையில், ஆளுநர் மாளிகை சார்பில் மேலும் ஒரு செய்திக்குறிப்பு ஏப்ரல் 23 அன்று வெளியிடப்பட்டது. எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், வருடந்தோறும் நடக்கும் துணை வேந்தர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாநாட்டை, அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான மோதல் போக்கு என்று ஊடகங்கள் தவறாகச் செய்திகள் பரப்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை, தவறான எண்ணத்தை உருவாக்குபவை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த மாநாடு திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அதில் நிபுணர்கள் பலரும் பங்கேற்று கருத்துகளைப் பகிர்கிறார்கள். கல்வி நிறுவனங்களை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள், தொழில் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படுகிறது. மாநில வளர்ச்சிக்காக நிறுவனங்களை போட்டித்திறன் வாய்ந்ததாக மாற்றுவது குறித்து உரையாடல்கள் நடக்கின்றன. இந்த மாநாடுகளின் பலன் கணக்கிடப்பட்டு தற்போது தெரியவந்துள்ளது.'' என்கிறது அறிக்கை.
முன்பு மாநில பல்கலைக்கழகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததால் மாணவர்களுக்கும், கல்வி வளர்ச்சிக்கும் பாதகமாக இருந்ததாகக் கூறும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு, ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டுக்கான திட்டமிடல் சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு, துணை வேந்தர்கள், கல்வி, தொழில்நுட்ப நிபுணர்களிடம் கலந்து பேசி மாநாட்டில் பேச வேண்டிய தலைப்புகள் பற்றி முடிவெடுக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
''இந்த ஆண்டிலும் ஜனவரி மாதமே இதற்கான பணிகள் துவங்கி, பல கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனுள்ள மாநாடாக மாற்றப்பட்டுள்ளது. கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக நல்ல நோக்கத்துடன் கல்விச் செயற்பாட்டை, சில ஊடகங்கள் தவறாக விளக்கி, சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புடன் இணைத்து, இதை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கதாகும். இவை அனைத்தும் மாண்பை குலைப்பதாகவும், உண்மைக்கு புறம்பாகவும் இருக்கிறது.'' என்று சென்னை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டமசோதா அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வேந்தர் என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான இந்த உச்சக்கட்ட மோதலில், யாருடைய பக்கம் நிற்பது என்பதில் தமிழகத்திலுள்ள அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது "சட்டவிரோதம்" என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காலக்கெடுவும் விதித்தது.
இதன் தொடர்ச்சியாக, அந்த 10 சட்ட மசோதாக்களும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழ்நாடு பல்கலைக் கழக சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) சட்ட முன்வடிவு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 2023 நவம்பர் 18-ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்படுவதாக அரசிதழில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன், ''தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அனைத்து மசோதாக்களும் சட்டமாக ஏற்கப்பட்டுள்ளன.
அதன் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட போதே, அது சட்டமாக நடைமுறைக்கு வந்து விட்டது. இப்போது பல்கலைக்கழகங்களின் வேந்தர் அதிகாரம் முதல்வருக்கே உரியது. துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது.'' என்றார்.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதால், தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு, தேசிய அளவிலும் பேசுபொருளானது.
இந்நிலையில், துணை வேந்தர்கள் மாநாட்டை, கடந்த ஏப்ரல் 16 அன்று கூட்டினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
அதற்கு மறுநாளே 3 நாள் பயணமாக புதுதில்லிக்குச் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துப் பேசினார்.
இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில், உதகையில் துணை வேந்தர்கள் மாநாடுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே தொடர்வதாகக் கூறி, இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான இந்த மோதலில், ஆளுநர் நடத்தவுள்ள துணை வேந்தர்கள் மாநாட்டில், அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது, இனி என்ன நடக்கும் என்பது பற்றி சட்டநிபுணர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி உள்ளிட்ட பல தரப்பினரிடமும் பிபிசி தமிழ் பேசியது.
ஆளுநர் மாளிகை ஏப்ரல் 22 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திலுள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் வருடாந்திர மாநாடு தொடர்ந்து 4 வது ஆண்டாக, வரும் ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை விருந்தினராகப் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு, மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிப்பாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கடன் கட்டமைப்பு, பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கல்வி ரீதியான ஒத்துழைப்புகள், கற்பித்தலை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவான விவாதங்கள் மற்றும் அமர்வுகளுடன் இந்த மாநாடு நடக்கும் என்றும் கல்வித்துறை, அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள் உரையாற்ற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஒஒன்றிணைத்து, ஒத்துழைப்பை வளர்ப்பது, சிறந்த கல்வி நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதே இந்த மாநாட்டின் நோக்கமென்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கும் முன்பே, பல்கலைக்கழகங்களுக்கு, கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதியிட்டு ஆளுநரின் முதன்மை செயலாளர் கிர்லோஷ் குமாரால் உள் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில் ஜெகதீப் தன்கர் பங்கேற்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத மாநில பல்கலைக்கழக துணை வேந்தர் ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன், ''இந்த மசோதாவின் படி, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மட்டும் அரசு எடுத்துக் கொண்டுள்ளது. அதிகாரமில்லாத வேந்தராக ஆளுநரே தொடர்கிறார்", என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதன் அடிப்படையில், அவர் இந்த மாநாட்டுக்கு அழைத்திருக்கலாம். தனியார் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இல்லை.
ஆளுநர் என்ற முறையில் அவர் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்களை அழைக்கலாமே தவிர, வேந்தராக அழைப்பதற்கு அவருக்கு அதிகாரமிருப்பதாகத் தெரியவில்லை. '' என்றார் ஹரி பரந்தாமன்.
மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், ''உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் மசோதா சட்டமாகிவிட்டது. அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ஓர் ஆணை வெளியிடவேண்டும். சட்டம் என்பது யார் வேந்தராக இருக்கலாம், துணை வேந்தரை யார் நியமிக்கலாம் என்பதற்கான ஏற்பாடு மட்டுமே.
அது நடைமுறைக்கு வர வேண்டுமென்றால் அதற்கு ஆணை அவசியம். அப்படியில்லாதபட்சத்தில், அந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றுதான் கருத்தில் கொள்ளவேண்டும்.'' என்று பிபிசி தமிழிடம் கூறினார்.
ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதே, சட்டமசோதா சட்டமாகி, நடைமுறைக்கு வந்து விட்டதாகவே கருத வேண்டுமென்கிறார் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்
வேந்தர் என்ற அதிகாரம் ஆளுநருக்கு இப்போது இருக்கிறதா?இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''சட்டத்திருத்தத்தில் ஆளுநர் என்ற இடத்தில் அரசு என்றுதான் இருக்கிறது. துணை வேந்தர் நியமனம் இனி அரசுக்குரியது. பழையபடி ஆளுநர் வேந்தராக தொடர்வதாகக் கொள்ளலாம்.
அப்படியே வைத்துக் கொண்டாலும் வேறு எந்த மாநிலத்தில் ஆளுநர்கள், வேந்தர் என்ற முறையில் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர்? உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆளுநர்கள் கூட்டியிருக்கிறார்களா?'' என்று கேட்டார்.
''கோடையில் உதகையில் ஆளுநர் ஓய்வெடுக்கலாம். துணை வேந்தர் மாநாட்டை அங்கே 2 நாட்கள் நடத்த அவசியமென்ன? மாநில அரசுதான் பல்கலைக்கழகங்களின் உரிமையாளர். அதுதான் நிதி ஒதுக்குகிறது.
இதில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. வேந்தர் என்ற முறையில் மாநில அரசுக்கு எதிராக துணை வேந்தர்களை தூண்டும் நோக்கில் ஆளுநர் கூட்டும் கூட்டம் சட்டவிரோதமானது.'' என்கிறார் பிரின்ஸ்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய சென்னை பல்கலைக்கழகம் மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், அமெட் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான திருவாசகம், ''சீராய்வு மனு எதுவும் தாக்கலாகி ஏற்கப்படாத நிலையில் அல்லது மறு உத்தரவு வழங்கப்படாத நிலையில், தற்போது வந்துள்ள உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி, மசோதா நடைமுறைக்கு வந்து விட்டது.
அதன்படி, தமிழகத்திலுள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதல்வருக்கே உள்ளது. அதனால்தான் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை அழைத்து, ஏப்ரல் 16 அன்று மாநாடு நடத்தினார் முதல்வர். அதிலும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களை அழைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.'' என்றார்.
''ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்குமான தனித்தனி சட்டத்திலும் வேந்தருக்கான அதிகாரம் வரையறுக்கப் பட்டுள்ளது. வேந்தர் என்ற முறையில் இப்போது யாரையும் ஆளுநர் அழைக்க முடியாது.
தமிழக ஆளுநர் என்ற முறையில், ஐஏஎஸ் அதிகாரிகளை அழைப்பதுபோல, துணை வேந்தர்களையும் அவர் அழைக்கலாம். ஆனால் அதற்குப் போவதும் போகாததும் அவரவர் விருப்பம். '' என்றார் திருவாசகம்
எந்தெந்த துணை வேந்தர்கள் இதில் பங்கேற்க வாய்ப்புள்ளது?''எனக்குத் தெரிய தமிழக அரசின் கீழ் இயங்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் யாரும் இதில் பங்கேற்க வாய்ப்பில்லை. தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஒரு மரியாதைக்காக இதில் கலந்து கொள்ளலாம். தற்போதுள்ள சூழலில், இந்த மாநாடு நடத்துவது எரிவதில் எண்ணெய் ஊற்றுவதுபோலுள்ளது.'' என்கிறார் முன்னாள் துணை வேந்தர் திருவாசகம்.
''வேந்தராக இல்லாமல் ஆளுநராக மட்டும் அழைத்தால் துணை வேந்தர்களாக இருக்கும் யாரும் பங்கேற்க வாய்ப்பில்லை. ஆளுநர் அழைப்பை ஏற்று பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. எல்லோரையும் கட்டாயம் பங்கேற்கச்செய்ய வேண்டுமென்பதற்காகவே, குடியரசு துணைத்தலைவரை அழைத்து வந்து இந்த மாநாட்டை ஆளுநர் நடத்துவதாகத் தெரிகிறது.'' என்றார் அரி பரந்தாமன்.
''இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இது மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டிய விஷயம் என்பதால் கட்சி, அரசு நிர்வாகம் இரண்டின் முடிவும் தெரிந்தபின்பே அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றி உறுதியாக எதையும் சொல்ல முடியும்.'' என்றார் பி.வில்சன்.
இந்த விவகாரத்தில் துணை வேந்தர்களின் நிலைப்பாடும், எதிர்பார்ப்பும் என்ன?இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர், ''ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பதால், இதில் பங்கேற்பதா வேண்டாமா என துணை வேந்தர்களுக்கு பெரும் குழப்பமும், சங்கடமான சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே பல்கலைக்கழகங்களின் வேந்தர் யார், அவருக்கான அதிகாரம் என்ன என்பது பற்றி தமிழக அரசு தெளிவு படுத்துவது நல்லது.'' என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு