தம் நண்பர்களுடன் இணைந்து ராம.அரங்கண்ணல் தயாரித்த படம்தான் பச்சை விளக்கு. பீம்சிங் இயக்கிய அந்தப் படத்தில் சிவாஜி ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்தின் பாடல்களுக்கு மெட்டு அமைப்பதற்காக மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் அலுவலகத்தில் காத்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு கண்ணதாசன் வந்தார்.
இந்தப் பாட்டுக்கான டியூனைப் போட்டுட்டியான்னு விஸ்வநாதனைப் பார்த்துக் கேட்டாரு. உடனே அதை வாசித்துக் காட்டுன்னு சொன்னார். அவர் வாசித்ததும் பக்கத்தில் இருந்த உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் பாடலை எழுதிக்கோன்னு சொன்னார் கண்ணதாசன்.
‘பொன்மலர்ச் செண்டு முகமாக, இருவண்டு விழியாக உருக்கொண்ட திருமாது மீனாட்சியே’ன்னு பாடல் வரிகளை அவர் சொல்லி முடித்ததும் எம்எஸ்வி. அருமைன்னு பாராட்டினார். அந்த உற்சாகத்தில் மொத்த பாடலையும் அடுத்த பத்தே நிமிடத்தில் எழுதி விட்டார் கண்ணதாசன். பச்சை விளக்கு படம் ஏவி.மெய்யப்பச்செட்டியாரின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டது. அதற்காக பாடல் எழுதி முடித்தவுடன் அவரிடம் அதைக் காட்டி பிடித்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு பாடலைப் பதிவு செய்யலாம் என்பதே மெல்லிசை மன்னரின் எண்ணமாக இருந்தது.
இவங்க எல்லாரும் நல்லாருக்குன்னு சொன்ன அந்தப் பாடல் அவருக்குப் பிடிக்கவில்லை. ‘பாடல் நயமா இருக்கு. ஆனா மக்களிடம் போய்ச் சேராது’ என்றார். ‘எம்எஸ்வி. டியூனுக்குத்தானே பாட்டு எழுதுனேன்’ என்றார் கண்ணதாசன். ‘அதைத்தான் நானும் சொல்றேன் டியூனையே மாற்றணும்’ என்றார் ஏவி.மெய்யப்ப செட்டியார். அதனால் எம்எஸ்வி. மீண்டும் டியூன் போட்டார்.
அதுக்கு எழுதிய பாட்டு தான் ‘தூது செல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாள் ஒரு தலைவி’ என்ற பாடல். மெய்யப்பச் செட்டியாரை முதலில் எழுதிய பாடல் கவரவில்லை என்றாலும் கண்ணதாசனுக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. அதனால் அந்த டியூனை வேறு ஒரு படத்துக்கு எப்படியாவது வைத்து விட வேண்டும் என எம்எஸ்வியிடம் சொன்னார் கண்ணதாசன்.
‘அண்ணே போன வாரமே அதை முக்தா சீனிவாசன் படத்துக்கு போட்டுட்டேன்’ என்றார். ‘யார் அந்தப் பாட்டை எழுதினாங்க?’ன்னு கண்ணதாசன் கேட்க, ‘வாலின்னு புதுசா வந்துருக்காரு. அவருதான் எழுதினார்’ என்றார் எம்எஸ்வி. அதைப் பாடிக்காட்டுன்னு கண்ணதாசன் சொல்ல, ‘மெய்யேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட, கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்’ என்று எம்எஸ்வி பாடி முடித்ததும் ரொம்ப நல்லா எழுதிருக்காருன்னு கண்ணதாசன் வாலியைப் பாராட்டினாராம். இந்தத் தகவலை கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் ஒரு கட்டுரையில் பகிர்ந்துள்ளார்.