“பாகிஸ்தான் பங்களிப்பிருந்தால் ஆதாரத்தைக் காட்டுங்க..” பாக். துணை பிரதமர் பகிரங்க எச்சரிக்கை!
Dinamaalai April 25, 2025 10:48 PM

இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில்  ஏப்ரல் 22ம் தேதி  பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள்  பயங்கர தாக்குதல்  நடத்தினர். இதில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும்  இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு இருக்கலாம் எனக் கூறப்படுவதால் பாகிஸ்தான் உடனான அனைத்து பரிமாறல்களையும் உடனடியாக  இந்தியா நிறுத்திவிட்டது. அதன்படி இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற  உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர்களது  விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்துவிட்டது.  

இந்த உத்தரவுகளின் எதிரொலியாக பாகிஸ்தான் அரசும் இந்தியாவுடனான சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அத்தோடு ராணுவத்தை தயார் நிலையில் இருக்கும்படி  உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.  

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர் ”காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பழி போடுகிறது. ஆதாரம் இருந்தால் காண்பிக்கட்டும். நாங்கள் தற்காப்புக்காக தான் தயார் நிலையில் இருக்கிறோம். எங்கள் மீது மீண்டும் ஒருமுறை இந்தியா பழி போட்டு விளையாடுகிறது. மேலும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு பாகிஸ்தான் இருந்தால் அந்த ஆதாரத்தை உலகிற்கு இந்தியா காட்டட்டும் ” என ஆவேசமாக கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.