திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சசிகலா மற்றும் அவருடைய தம்பி திவாகர் ஆகிய இருவரும் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தனர். கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “தற்போதுள்ள அரசு பேருந்துகளில் மக்கள் ஏறுவதற்கு கூட பயப்படுகிறார்கள். போக்குவரத்து துறை அமைச்சர் தவறான தகவல்களை கூறி வருகிறார். அரசு பேருந்துகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக என்னுடைய பங்களிப்பு இருக்கும். மாற்றமும் வரும். திமுக அரசு 8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள நிலையில், ஆண்டுதோறும் அதற்கு வட்டி கட்டுகிறது. இப்படி இருக்கையில் அவர்கள் எப்படி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வார்கள்.
திமுக அரசு வட்டி கட்ட முடியாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கி வருகின்றனர். திட்டங்களை கொண்டு வருவதற்கும் பெரிய அளவில் கமிஷன் வாங்குகிறார்கள். இவர்கள் கமிஷன் வாங்குவதால் தான் ஒப்பந்ததாரர்களால் பணிகளை முடிக்க முடியவில்லை. பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவதில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் அப்படி மாற்றினால் பொது மக்களுக்கு வரி சுமை அதிகமாகும்.
திமுக அரசு பொது மக்களின் வீட்டை தட்டி வரிவசூலிப்பதில் மட்டும்தான் குறிக்கோளாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சொத்துவரி மற்றும் மின்கட்டணம் என அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்த திமுக அரசிடமிருந்து பொதுமக்களுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும் எனக் கூறியுள்ளார்.