30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறோம்! ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை- பாக். அமைச்சர்
Top Tamil News April 26, 2025 02:48 AM

30 ஆண்டுகளாக  தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து வருகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியுள்ளார்.

ஸ்கை நியூஸ் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பது உண்மைதான். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நீண்ட கால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டிருக்கிறது. இந்த மோசமான காரியத்தை கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்காக செய்து வருகிறோம். அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன் உட்பட மேற்குலக நாடுகளுக்காகவும் செய்து வருகிறோம். இது தவறு, இந்த தவறால் நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம்.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. அதை எதிர்கொள்ள நாங்கள் தயாரக இருக்கிறோம். அதற்காக காத்திருக்கிறோம். இந்தியா எறியும் கல்லுக்கு பதில் செங்கல்லை பதிலடியாக கொடுப்போம். பாகிஸ்தானியர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். எங்களுக்கு எதிராக இந்தியா தீவிரம் குறைந்த போரைத் தொடுத்து வருகிறது. போரை தீவிரப்படுத்தினால் நாங்கள் அதற்கு தயார். எங்களுடைய நிலத்தைப் பாதுகாக்க எந்தவொரு சர்வதேச அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம். பாகிஸ்தானுக்கும் பஹெல்காம் பயங்கரவாத சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை எப்போதும் ஆதரித்ததிலை. அங்கு ராணுவமோ அல்லது காவல்துறையோ மக்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்ததால் பாகிஸ்தானைக் குறை கூறுவது ஒரு வசதியான சாக்காக மாறிவிட்டது. இந்திய அரசுக்கு எதிராக நாகலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், காஷ்மீர் என பல இடங்களில் புரட்சி நடக்கின்றன. ஆகவே இது அந்நிய ஊடுறுவலால் ஏற்பட்டவையல்ல. அனைத்தும் உள்நாட்டு எழுச்சியால் ஏற்பட்டவையே. இந்துத்துவ சக்திகள் இந்தியாவில் சிறுபான்மையினரை, கிறிஸ்தவர்களை, பவுத்தர்களை அடக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும் மக்கள் எதிர்வினையாற்றுகின்றனர்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.