தூத்துக்குடி குரூஸ் புரத்தை சோ்ந்தவா் ஆரோக்கிய தாஸ் - பிரேமலதா தம்பதியரின் மகள் ரிச்சா்ட் சுபாஷினி (23). டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்று தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் பில் கலெக்டா் பணிக்கு தோ்வாகியுள்ளாா். இம்மாதம் 28ம் தேதி சென்னையில் வேலைக்கு சேர உள்ளார்.
இந்நிலையில், கீழ வைப்பாரில் உள்ள அவரது பாட்டி ஜோஸ்பினை பாா்த்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக ஸ்கூட்டியில் தனது தாய் பிரேமலதாவுடன் (62) நேற்று பகலில் புறப்பட்டு சென்றாா். தூத்துக்குடி - ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் குளத்தூரை அடுத்த பனையூா் பாலம் அருகில் சென்றபோது எதிா்திசையில் வந்த தனியாா் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டி மீது மோதியது. இந்த விபத்தில் பிரேமலதா பலத்த காயமடைந்தாா்.
தகவல் அறிந்து குளத்தூா் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேமலதாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், பிரேமலதா இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக ரிச்சா்ட் சுபாஷினி அளித்த புகாரியின் பேரில் குளத்தூா் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநா் பரமக்குடியை சோ்ந்த இளங்கோவன் என்பவரை கைது செய்தனா்.