Jasprit Bumrah: மலிங்காவின் சாதனையை முறியடித்த பும்ரா - பயிற்சியாளர் குறித்து பேசியதென்ன?
Vikatan April 28, 2025 03:48 PM

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா IPL 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான லஸித் மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது ஐபிஎல் கரியரில் 139 போட்டிகளில் 174 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் பும்ரா.

முன்னதாக இலங்கை வீரர் லஸித் மலிங்கா, 122 போட்டிகளில் 170 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், அப்துல் சமத் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள்,

1. ஜஸ்பிரித் பும்ரா - 174

2. லஸித் மலிங்கா - 170

3. ஹர்பஜன் சிங் - 127

4. மிட்செல் மெக்லெனகன் - 71

5. கீரன் பொல்லார்ட் - 69

Jasprit Bumrah பேசியதென்ன?

பும்ராவின் சாதனையைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்கள் நீத்தா அம்பானி, ஆகாஷ் அம்பானி அவருக்கு எழுந்து நின்று கை தட்டினர்.

போட்டிக்கு பிறகு மலிங்கா மற்றும் பும்ரா பேசிக்கொண்டிருக்கையில் கேமரா அவர்களை நெருங்கியது. அப்போது, "அவர்கள் கண்டெண்ட் உருவாக்குகிறார்கள்... இவர்தான் (மலிங்கா) சிறந்த பௌலர்" என பும்ரா கூறியிருக்கிறார். பின்னர் அதனை மறுத்தும் மலிங்கா, "இல்லை இவர்தான் (பும்ரா) சிறந்தவர்" எனக்எனக் கைகாட்டியுள்ளார்.

இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.