ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் துக்கத்தில் மூழ்கியுள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்று பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.
தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் அதற்கு பாகிஸ்தானைக் 'குற்றம்சாட்டி' சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததுடன், பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசாக்களையும் ரத்து செய்தது.
பின்னர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25), மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் தங்கள் மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களை அடையாளம் கண்டு, அவர்களை திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை, குஜராத் மாநிலம், அகமதாபாத் மற்றும் சூரத்தில், வங்கதேசத்தினர் மற்றும் பிற வெளிநாட்டினர் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளூர் காவல்துறையினரால் பிடித்து வைக்கப்பட்டனர். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
குஜராத் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, காவல்துறை வாகனத் தொடரணியின் படங்களும், பிடித்து வைக்கப்பட்டவர்களின் கூட்டத்தின் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வைரலானது.
வைரலாகும் காணொளியில், வாகனத் தொடரணியின் இருபுறமும் வரிசையாக போலீசார் நிற்பதையும், ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் வாகனத் தொடரணியின் நடுவில் நடந்து செல்வதையும் காணலாம்.
மற்றொரு காணொளியில், பிடித்து வைக்கப்பட்ட பலர் காவல்துறை வாகன நிறுத்துமிடத்தில் வரிசையாக அமர்ந்திருப்பதைக் காணலாம்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, அகமதாபாத்தின் சந்தோலா, சூரத்தின் சில பகுதிகள், ராஜ்கோட் மற்றும் மஹிசாகர் மாவட்டங்களில் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
"ராஜ்கோட் காவல்துறை, குற்றப்பிரிவு, சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் பிற பிரிவுகள் இணைந்து, நள்ளிரவில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டன, இதில் 10க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் பிடிபட்டனர்" என்று ராஜ்கோட்டைச் சேர்ந்த பிபிசி நிருபர் பிபின் டன்காரியா தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை குறித்து அகமதாபாத் குற்றப்பிரிவு இணை காவல் ஆணையர் ஷரத் சிங்கால் கூடுதல் தகவல்களை வழங்கினார்.
"அகமதாபாத்தில் ஊடுருவியவர்களை கண்டறிந்து, காவலில் வைக்குமாறு உள்துறை இணை அமைச்சர், டிஜிபி மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் ஆகியோரால் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், ஏப்ரல் 2024 முதல் இதுவரை, குற்றப்பிரிவு இது தொடர்பாக இரண்டு எஃப்ஐஆர்களைப் பதிவு செய்துள்ளது, மேலும் சட்டவிரோதமாக வசிக்கும் 127 வங்கதேசத்தினர் பிடிபட்டனர். இவர்களில் 77 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர், மேலும் சிலருக்கான உத்தரவுகள் வருவதற்காக காத்திருக்கிறோம்" என்று அவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பிடித்து வைக்கப்பட்டவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், சந்தோலாவைச் சுற்றி ஏராளமான வங்கதேசத்தினர் வசிப்பது கண்டறியப்பட்டது. இன்று காலை காவல்துறை அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அதிகாலை 2 மணி முதல் இந்த நடவடிக்கை நடந்து வருகிறது."
"இதுவரை 457 பேரை நாங்கள் காவலில் வைத்துள்ளோம். அவர்கள் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த மக்கள் வங்கதேச குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, இங்கு வந்த பிறகு தங்களது அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களை நாடு கடத்தும் பணியைத் தொடங்குவோம்.'' என கூறியுள்ளார்
அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தானா என்பது எப்படி உறுதிசெய்யப்படுகிறது என்று கேட்டபோது, இதைச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன என்று ஷரத் சிங்கால் கூறினார்.
"பல தகவல்களின் அடிப்படையில் இதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். அவர்கள் எப்போது அடையாள அட்டையைப் பெற்றனர், எப்போது, எங்கு பிறந்தார்கள், அவர்களின் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் இதில் அடங்கும். இது தவிர, அவர்கள் தற்போது யாருடன் தொடர்பில் உள்ளனர், எப்போது வங்கதேசத்திற்குச் சென்றார்கள் என்பதும் கண்டறியப்படுகிறது. இந்தத் தகவல்கள் அனைத்தையும் சேகரித்த பிறகு இந்த செயல்முறை நிறைவடைகிறது" என்று அவர் கூறினார்.
இது தவிர, சூரத் நகரத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு 100க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினரை பிடித்துள்ளது. இந்த நபர்கள் போலி ஆவணங்களுடன் இந்தியாவிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் காவல் குழுவில் சிறப்பு நடவடிக்கைக் குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அடங்குவர்.
"விசாரணைக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் வங்கதேசத்திற்கு அனுப்பப்படுவார்கள்" என்று சிறப்பு நடவடிக்கைக் குழு டிசிபி ராஜ்தீப் சிங் நகும் கூறினார்.
பிபிசி செய்தியாளர் தக்ஷேஷ் ஷாவிடமிருந்து கிடைத்த தகவலின்படி, மாநில அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மஹிசாகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களையும் காவல்துறை தேடத் தொடங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், கான்பூர் தாலுகாவில் உள்ள கரந்தா கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களை கண்டறிவதற்கான மிகப்பெரிய நடவடிக்கை இது என்று குஜராத் அரசு கூறுகிறது.
இந்த நடவடிக்கையில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச குடிமக்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். இதில் அகமதாபாத்தைச் சேர்ந்த 890 பேரும், சூரத்தைச் சேர்ந்த 134 பேரும் அடங்குவர்.
சூரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "குஜராத் காவல்துறை இதுவரை எடுத்ததில் மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். இதில், சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொரு நபரும் வெளியேற்றப்படுவார்கள். இந்த வங்கதேச மக்கள் அனைவரும் வங்காளத்தில் இருந்து சட்டவிரோத போலி ஆவணங்களை தயாரித்து, அதன் அடிப்படையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகின்றனர். சிலர் போதைப்பொருள் வர்த்தகம் அல்லது மனித கடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
இதற்கு முன்னர் பிடிபட்டவர்களில் சிலர் தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவின் 'ஸ்லீப்பர் செல்களாக' வேலை செய்து வந்ததாக ஹர்ஷ் சங்வி கூறினார்.
"முன்னர் பிடிபட்ட நான்கு வங்கதேசத்தினரில் இருவர் குஜராத்தில், அல்-கொய்தாவின் ஸ்லீப்பர் செல்களாகப் பணியாற்றி வந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இந்த வங்கதேசத்தினரின் பின்னணி மற்றும் அவர்களின் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது" என்று அவர் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களை எச்சரித்த ஹர்ஷ் சங்வி, "நான் அனைவருக்கும் ஒரு தெளிவான செய்தியை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவராக இருந்து குஜராத்தில் சட்டவிரோதமாக வசிக்கிறீர்கள் என்றால், காவல் நிலையத்திற்குச் சென்று சரணடையுங்கள், இல்லையெனில் காவல்துறையினர் உங்களின் வீட்டிற்கு வந்து உங்களை பிடித்துச் செல்வார்கள். அதன் பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இதுதொடர்பான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
பாகிஸ்தானுடனான 1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்தது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு/ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் பாகிஸ்தான் திரும்ப வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து பாதுகாப்பு/ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்களையும் இந்தியா திரும்ப அழைத்தது.
தூதரகங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 55 லிருந்து 30 ஆகக் குறைக்கப்படும். இந்த முடிவு மே 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு