ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தது இந்தியா முழுவதும் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி வெளியிட்ட கருத்துகள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன.
ஷாஹித் அப்ரிடி, “இந்திய அரசு தனது சொந்த மக்களைக் கொன்றுவிட்டு, அதற்குப் பாகிஸ்தானை குறை கூறுகிறது” என்கின்ற அபத்தமான குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இந்திய ராணுவம் பயனற்றது, காஷ்மீரில் 8 லட்சம் ராணுவ வீரர்கள் இருக்கின்றபோதும் தாக்குதலை தடுக்க முடியவில்லை என்பது இந்திய இராணுவத்தின் திறமையின்மையை காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தாலும் பழி பாகிஸ்தான் மீது சுமத்தப்படுகிறது,” என்றும் அப்ரிடி விமர்சித்தார்.
ஷாஹித் அப்ரிடியின் இந்த கருத்துகள் மீது பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அப்ரிடி பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து பணம் பெற்று இந்தியாவுக்கு எதிராக அபத்தமான அறிக்கைகள் வெளியிடுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதற்காக, அப்ரிடியின் நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஒளிபரப்ப அனுமதிக்கக்கூடாது என்றும், அவரை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் டேனிஷ் கனேரியா இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்ரிடி போன்றவர்கள் மக்களைத் தூண்டிவிட முயல்கின்றனர். இந்திய அரசு இதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கனேரியா வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஏற்கனவே பதற்றமான உறவுகளில் இது மேலும் தீவிரத்தை உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.