இந்தியா முழுவதும் சுமார் 1200க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2021 பிப்ரவரி மாதத்தில் இருந்து ஃபாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டது.
சுமார் 97 சதவீதம் பேருக்கு ஃபாஸ்டாக் வழங்கப்பட்டுள்ளது. 6.9 கோடிக்கும் அதிகமானோர் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் போக்குவரத்தை எளிமையாக்க சாட்டிலைட் மூலம் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் முடிவு செய்திருப்பதாகவும் வரும் மே 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியானது.
ஆன்-போர்டு யூனிட் (OBU) அல்லது கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்ட வாகனங்கள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும். வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் எவ்வளவு தூரம் பயணிக்கிறதோ அதற்கேற்ப வாகனத்துடன் இணைக்கப்பட்ட வங்கி டிஜிட்டல் வாலட்டில் இருந்து டோல் கட்டணம் நேரடியாகக் கழிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதற்கு தற்போது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், “தற்போதுள்ள ஃபாஸ்டேக் டோல் முறை மாற்றப்பட்டு, சாட்டிலைட் அடிப்படையிலான சுங்கக் கட்டண முறை மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அத்தகைய எந்த முடிவையும் மத்திய சாலை போக்குவரத்து துறை எடுக்கவில்லை.
சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்களை தடையின்றி இயக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட டோல்கேட்களில் ‘ANPR-FASTag அடிப்படையிலான தடையற்ற கட்டண முறை’ செயல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.