நாளை முதல் அமல்..! ரயில் டிக்கெட் முன்பதிவில் வருகிறது புதிய மாற்றம்..!
Newstm Tamil April 30, 2025 12:48 PM

இந்தியன் ரயில்வே தற்போது பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மேலும் வரும் மே 1ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருகிறது என்றும் இது கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் பயணிகள் தங்களின் பெயர் காத்திருப்பு பட்டியலில் இருந்தால் படுக்கை வசதிக்கொண்ட முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யக்கூடாது என்றும் முன்பதிவில்லாத பொதுப்பெட்டியில்தான் பயணிக்க வேண்டும் என்றும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது, ஒருவர் ஆன்லைன் வழியாக டிக்கெட் எடுத்து, அவரது பெயர் காத்திருப்பு பட்டியலில் இருந்தால் தானாகவே அந்த டிக்கெட் ரத்தாகிவிடும், நீங்கள் முழு டிக்கெட் பணமும் உங்களது வங்கிக் கணக்கிற்கே திரும்பி வந்துவிடும். இந்த டிக்கெட்டை வைத்து நீங்கள் பயணித்தால், டிக்கெட் இல்லாமல் பயணிப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும். அபராதம் செலுத்த நேரிடும். 

மறுபுறம், ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டரில் முன்பதிவு செய்து, சார்ட் தயாரான பின்னரும் அந்த டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருந்தால், பலரும் முன்பதிவு பெட்டிகளில் (Sleeper or AC Coaches) ஏறிவிடுகின்றனர். ஆனால், இதற்கு தான் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. சார்ட் தயாரான பின்னரும் உங்கள் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருந்தால் உங்களுக்கு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ய அனுமதியில்லை என அர்த்தம். 


வரும் மே 1ஆம் தேதி முதல் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுடன் பயணி ஒருவர் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு தடை விதிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுடன் ஒரு பயணி குறிப்பிட்ட இந்த முன்பதிவு பெட்டிகளில் இருக்கையில் அமர்ந்திருப்பது கண்டறியப்பட்டால், டிக்கெட் பரிசோதகர் அந்த பயணியிடம் அபராதம் விதிப்பார் அல்லது பொதுப் பெட்டிக்கு மாற்றுவார்.


"ரயிலில் முன்பதிவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகளின் வசதியை உறுதிசெய்யவே இந்த விதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் வைத்திருப்பவர்கள், காத்திருப்பு பட்டியிலில் இருப்பவர்களால் எந்த அசௌகரியமும் ஏற்படாது" என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் ஏறி, இருக்கைகளை ஆக்கிரமிப்பு செய்வதால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவது மட்டுமின்றி, பயணிகள் இடையே பிரச்னைகளும் வெடிக்கின்றன. இதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.