இன்று அட்சய திருதியை தினத்தில் பொட்டு தங்கமாவது வாங்க வேண்டும் என்பதை யார் கண்டு பிடித்தார்கள் என்பது குறித்த சரியான விபரமில்லை. ஏதோவொரு நகை வியாபாரி, தனது வியாபார யுக்தியை செயல்படுத்தி இருக்கலாம். தங்கத்திற்கும் அட்சய திருதியைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது தான் நிஜம். அட்சயம் என்றால் அரிசி தானே? அட்சய பாத்திரம், அட்சதை என்று நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்கள் தானே?
சரி.. எது எப்படியிருந்தாலும், இப்படியான நம்பிக்கைகளின் பெயரிலாவது தங்கத்தை வாங்கி சேமித்தால் சரி தான். கல்யாணத்திற்கு நகை வாங்குபவர்கள், அதற்கான முதல் தங்கத்தை அன்று வாங்க துவங்கலாம். அன்று வாங்குகிற, செய்கிற செயல்கள் பெருகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் திருதியை திதி வரும் என்றாலும் சித்திரை மாதத்தில் வருகிற திருதியை திதியை அட்சய திருதியை என்கிறோம்.
அட்சய திருதியை அன்று தான் அஷ்டலட்சுமிகளும் அவதாரம் எடுத்தார்கள். இதே போன்றதொரு அட்சய திருதியை நாளில் தான் விஷ்ணுவின் மார்பில் திருமகள் இடம் பிடித்தாள். இத்தகைய சிறப்புடைய நன்னாளில் தான் என்ன காரியம் செய்தாலும் வெற்றி நமக்கே என்பதை கொண்டாடும் வகையில் தான் அட்சய திருதியை அனுசரிக்கப்படுகிறது.
அட்சயதிருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். ஏழை , எளிய மக்களுக்கு நம்மால் இயன்றவரை இந்நாளில் தானம் செய்திட சுபிட்சமான வாழ்வு அமையும் என்பது ஐதிகம். அந்த வகையில் நடப்பாண்டில் அட்சய திருதியை மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு பெருகும்.
என்னென்ன தானம் வழங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க. அன்று தவிக்கிற வாய்க்கு தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு அன்றைய தினம் தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம். இந்த கோடை காலத்தில் அன்று மட்டுமல்லாமல் தினமுமே ஜீவராசிகளுக்கு தண்ணீர் அருந்தும் வகையில் உதவி செய்யலாம்.
அதே போன்று இன்று குங்குமத்தை தானமாக வழங்கினால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும். மஞ்சளை தானமாக வழங்கினால் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம். அருகில் உள்ள ஏதோவொரு அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கு வருகின்ற சுமங்கலிகளுக்கு குங்குமத்தையும், மஞ்சளையும் தந்தால், தாலி பாக்கியம் பலப்படும்.
வெல்லம், நெய், உப்பு இவைகளை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம். பால், தயிர் தானமாக வழங்கினால் செல்வ செழிப்பை பெறலாம். சந்தனத்தை தானமாக வழங்கினால் ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். இந்நாளில் குலதெய்வத்தை பிரார்த்தித்து, இஷ்ட தெய்வத்தை வணங்கி இயன்ற அளவு தானம் செய்திட வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.