ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தொடங்கி, பிரதமர் மோடிக்கு எல்லைப்பாதுகாப்புக்கு ரோபோ டெக்னாலஜி எப்படி உதவியாக இருக்கும் என்று விவரித்த அமெரிக்கா வாழ் இந்தியர் ஹர்ஷவர்த்தனா கிச்சேரியின் முடிவு அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரில் உள்ள ஜெயச்சாமராஜேந்திர பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற ஹர்ஷவர்தனா கிக்கேரி, அமெரிக்காவின் சிராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரோபோட்டிக்ஸ் துறையில் பணியாற்றிய இவர், பல விருதுகளைப் பெற்றவர்.
கடந்த 2017ம் ஆண்டு, ஹர்ஷவர்தனா மனைவி ஷ்வேதா பன்யம் மற்றும் மகன்களுடன் இந்தியாவுக்குத் திரும்பி, மைசூரின் விஜயநகரில் ‘ஹோலோவேர்ல்டு’ என்ற ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தை நிறுவினர். ஷ்வேதா நிறுவனத்தின் தலைவராகவும், ஹர்ஷவர்தனா தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினர். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, எல்லைப் பாதுகாப்பிற்கு ரோபோக்களைப் பயன்படுத்துவது குறித்து கூட ஹர்ஷவர்தனா கிக்கேரி விவாதித்துள்ளார். ஆனாலும் கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் குடும்பத்தினருடன் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவில் ‘ஹோலோசூட்’ என்ற புதிய ஏஐ-அடிப்படையிலான முழு உடல் இயக்கப் பதிவு உடையை உருவாக்கினர் . இந்நிலையில் நியூகேஸ் வீட்டில் இருந்த ஹர்ஷவர்தனா கிக்கேரி, தனது மனைவி ஷ்வேதா பன்யம், அவர்களது மூத்த மகன் துருவா கிக்கேரி ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கிங் கவுண்டி போலீசார், இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து விசாரிக்கிறோம்.குடும்பப் பிரச்னை காரணமாக இச்சம்பவம் நடந்ததாக தெரியவில்லை.ஹோலோவேர்ல்டு நிறுவனத்தின் மூடல் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் நடந்திருக்கக்கூடும் என்று கூறியுள்ளனர். சம்பவத்தின் போது இளைய மகன் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஒரு வித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.