அரசியல்வாதிகள் தாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் பேசும் பொதுக்கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் வரவேண்டும் என ஆசைப்படுவார்கள். இதற்காக கட்சி நிர்வாகிகள் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவார்கள். ஆனால், பணம் கொடுக்காமலேயே நடிகர்களுக்கு கூட்டம் கூடுவார்கள். ஏனெனில் அவர்கள் ரசிகர்கள். திரையில் மட்டுமே தான் பார்த்து ரசித்த தனக்கு பிடித்த நடிகரை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் அவர்கள் இருப்பார்கள்.
1960,70களில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அதிக கூட்டம் கூடியது. இதில், சிவாஜியை விட எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் அதிகம். அந்த கூட்டம் அவரின் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கும் கூடியது. அவர் இறந்தபோதும் பல லட்சம் பேர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அதேபோல், அடுத்து நடிகர் ரஜினி எங்கு சென்றாலும் கூட்டம் கூடும். ஏனெனில் எம்.ஜி.ஆருக்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக ரஜினி இருந்தார்.
அதேபோல், விஜயகாந்த், கமல் போன்றவர்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார். தனது ரசிகர்களை நம்பியே அரசியல் கட்சி துவங்கி எதிர்கட்சி தலைவர் பதவி வரை போனார் விஜயகாந்த். அவர் இறந்தபோது அவரின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் கலந்துகொண்டார்கள்.
அடுத்து விஜய், அஜித்துக்கு அதிக கூட்டம் கூடுகிறது. விஜயும், அஜித்தும் கடந்த பல வருடங்களாகவே போட்டி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இருவரின் ரசிகர்களும் டிவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அஜித் படம் வரும் போது அப்படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் கமெண்ட் போடுகிறார்கள். விஜய் படம் வெளியாகும்போது அஜித் ரசிகர்களும் இதையேதான் செய்கிறார்கள்.
இப்போது அரசியல் கட்சி துவங்கியுள்ள விஜய் சமீபத்தில் கோவை வந்தபோது அவரை பார்க்க பல ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்துவிட்டார்கள். அதேபோல், அவர் செல்லும் வழி முழுவதிலும் அவர்கள் பின்னாலேயே சென்றார்கள். இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என விஜய் இன்று அறிக்கையே வெளியிட்டார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் ‘அஜித் மட்டும் ஒரு கூட்டத்தை கூட்டினா விஜய்க்கு வந்ததை விட அதிகமா வருவாங்க. ஏன்னா அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. அஜித் மட்டும் அவரின் ரசிகர்களை சந்திச்சா விஜய் கூட்டின கூட்டமெல்லாம் ஒன்னுமில்லாம போகும். விஜயகாந்த் மாதிரி அஜித்தும் மாதம் ஒருமுறை ரசிகர்களை சந்தித்து சாப்பாடு போட்டா போதும். விஜயோட இந்த கூட்டம் எல்லாம் ஒன்னும் இல்லாம போயிடும்’ என பேசியிருக்கிறார்.