மத்திய அரசு விமான நிலையங்களில் காணப்படும் அதிகமான உணவுக் கட்டணங்களை தவிர்க்கும் வகையில் ஒரு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புனே விமான நிலையத்தில், விமான பயணிகளுக்காக குறைந்த விலைக்கான உணவுகள் வழங்கும் ‘உடான் யாத்ரி கஃபே’ திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் அவர்களால் திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த உணவகத்தில் பயணிகள் தேநீர் ரூ.10, வடாபாவ், சமோசா, காபி, இனிப்புகள் ரூ.20 என்ற குறைந்த விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும். இது, விமானப்பயணத்தை மக்களுக்கும் எளிமையாகவும், வசதியாகவும் அமைய உருவாக்கப்பட்ட ‘உதான்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த கஃபே, கொல்கத்தா, சென்னை, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களின் விமான நிலையங்களில் ஏற்கனவே செயல்பட்டுவருகிறது. மும்பை விமான நிலையத்திலும் விரைவில் தொடங்கப்படும் என மொஹோல் அறிவித்துள்ளார்.