இந்திய நிர்வாக சேவையின் (IAS) மூத்த அதிகாரியான அஷோக் கேம்கா. 33 ஆண்டுகளாக சேவை புரிந்து, 57 முறை இடமாற்றம் செய்யப்பட்ட இவர், 2025 ஏப்ரல் 30 அன்று ஓய்வு பெற்றார். 1991ஆம் ஆண்டு ஹரியானா மாநில கேடரில் சேர்ந்த இவர், ஊழலை எதிர்த்து, நேர்மையான பணியாற்றலுக்காக மிகவும் பிரபலமாக பேசப்பட்டவா்.
கேம்காவின் சேவை காலத்தில், அவர் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆட்சியில், முக்கியத்துவமற்ற துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான DLF இடையிலான சர்ச்சைக்குரிய நில விவகாரத்தை ரத்து செய்ததன் மூலம், அவர் ஊழலை எதிர்த்தவர் என புகழ்பெற்றார்.
கேம்கா, ஐஐடி காரக்பூரில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றதுடன், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச்சில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஓய்வு பெற்ற பிறகு கேம்கா வழக்கறிஞராகப் பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பார்கவுன்சிலில் பதிவு செய்யும் முயற்சியில் உள்ளதாக தெரிவித்தார்.
அஷோக் கேம்காவின் சேவை, இந்திய நிர்வாகத்தில் நேர்மையின் அடையாளமாகும். அவர் எதிர்கொண்ட சவால்கள், எதிர்கால அதிகாரிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.