“ரூ.2.3 லட்சம் சம்பளம்”… குழந்தையை பராமரிக்க வேலையை விட்ட தந்தை… முழு நேர பராமரிப்பாளராகவே மாறிய கதை… பிரசவத்திற்கு பின் மாறிய வாழ்க்கை..!!
SeithiSolai Tamil May 02, 2025 09:48 PM

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் 32 வயதான ஒருவர், தனது மகளின் முழுநேர பராமரிப்பை மேற்கொள்வதற்காக உயர் சம்பள வேலையை ராஜினாமா செய்ததையடுத்து, ‘போஸ்ட்பார்டம் டிப்ரஷன்’ அனுபவித்ததாகக் கூறி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ‘ஜாஸ்மினின் அப்பா’ என ஆன்லைனில் அறியப்படும் அவர், முன்பு ஒரு செல்லப்பிராணி உணவுக் நிறுவனத்தில் மேலாளராக இருந்து மாதம் சுமார் ரூ.2.3 லட்சம் சம்பாதித்து வந்தார்.

தற்போது வீடிலிருந்து குழந்தை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அவரது மகள் ஜாஸ்மின் 2023 மே மாதத்தில் பிறந்ததையடுத்து, தாய் பணியில் இருந்த மனைவிக்கு பதிலாக, இவர் குழந்தையின் பராமரிப்பை முழுமையாக ஏற்க முடிவு செய்தார். அவர் தினமும் காலை 6 மணிக்கு எழுந்து, ஜாஸ்மினுக்காக சமைத்து, சுத்தம் செய்து, பூங்காவிற்கு அழைத்துச் செல்லும் வேலைகளை செய்து வருகிறார்.

இரவில் மூன்று மணி நேரத்திற்கொரு முறையும் குழந்தையை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், தூக்கமின்மை, உடல் சோர்வு, மூட்டு வலி ஆகியவற்றால் அவதிப்படுவதாகவும், குடும்பத்தினர் மற்றும் மனைவியிடமிருந்து சரியான ஆதரவு இல்லாததால் மன அழுத்தம் அதிகரித்ததாகவும் தெரிவித்தார். தன் குழந்தை நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்போதும், 5 நாட்கள் தூக்கமின்றி பராமரித்த சம்பவம் அவரை கடுமையாக பாதித்துள்ளது.

இந்நிலையில், அவர் வெளியிட்ட வீடியோ 4 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. பொதுவாக பெண்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் ‘பிரசவத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு’, ஆண்களுக்கும் ஏற்படலாம் என்பதைத் தெளிவாகக் காட்டும் இந்த சம்பவம், சீன சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரை விமர்சித்தாலும், பெரும்பாலானோர் அவரின் நேர்மையும், தந்தையாக எடுத்த கடமையையும் பாராட்டி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.