மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் 4 வருடங்களுக்கு முன்பாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.
எந்த ஒரு பிழையும் நடக்காதவாறு ஜாதிவாரி கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும். மதிமுக பதவிக்காக கணக்கு போட்டு திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. எனவே எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் கண்டிப்பாக திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்றார். மேலும் சமீபத்தில் மதிமுக கட்சியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்த நிலையில் பின்னர் கட்சியில் சமாதானம் பேசப்பட்டு தொடர்ந்து அவர் கட்சியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.