அதிமுக கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற மே தின விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவை ஆட்சியில் அமர வைத்த அரசு ஊழியர்களுக்கு தற்போது அல்வா கொடுத்துவிட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என அனைத்து ஊழியர்களையும் போராடும் நிலைக்கு தள்ளியுள்ளனர். இனிக்க இனிக்க பேசி முதல்வர் ஸ்டாலின் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை அனைவருமே ஏமாற்றத்தான் செய்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும் தைரியம் இருந்தால் தேர்தலில் தனித்து நிற்கட்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் கொதித்துப் போய் இருக்கிறார்கள். நீங்கள் வைத்தால் மட்டும் தவறு கிடையாது அதுவே நாங்கள் வைத்தால் தப்பா. கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் கட்சியை பார்த்து கலைஞர் கருணாநிதியே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கு இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கவில்லை. அவர்கள் திமுகவுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள். இப்போது தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பெரிய இடைவெளி விழுந்துவிட்ட நிலையில் நானும் ரவுடிதான் என்பது போல் அவர்கள் மே தின கூட்டத்தை நடத்துகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் மக்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை. அவர் எப்போதுமே நடிப்பு சிந்தனையில் மட்டும் தான் இருக்கிறார். காலையில் ஒரு சூட்டிங் மாலையில் ஒரு சூட்டிங் விடிந்ததும் மறுநாள் ஒரு சூட்டிங் ஆட்சி நடத்துகிறார். சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக துடித்த போது அதனை அதிமுகவின் எதிர்பார்தான் தள்ளிவைத்தனர் என்று கூறினார்.