ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் இந்திய நாட்டிற்கு பல தடைகளை விதித்துள்ளது.
அதில் தங்கள் வான் வழியை இந்தியா பயன்படுத்தக்கூடாது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்திய விமானங்களுக்கு அதிக எரிபொருள் செலவுகள் ஏற்படுவதாக விமான நிறுவனங்கள் கூறியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஒரு வருடத்திற்கு ரூ 5000 கோடி நஷ்டம் ஏற்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தடை தொடர்ந்து நீடிப்பதால் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 5000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக டாடா குழுமம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு இழப்பீடு கோரி கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், பாகிஸ்தான் அரசு விதித்த தடையால் சர்வதேச விமானங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்பதால் மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், தடைவிலக்கப்பட்ட பிறகு மானியங்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.