200 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்தவர் - பாம்புக்கடி மருந்துக்கு உதவுவது எப்படி?
BBC Tamil May 04, 2025 09:48 AM
Getty Images கருப்பு மாம்பா என்பது உலகின் மிகக் கொடிய விஷமுடைய பாம்பு என்று கூறலாம்

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தனது உடலில் பாம்பு விஷத்தை செலுத்திக்கொண்ட ஒரு அமெரிக்கரின் ரத்தம், பாம்பு விஷத்துக்கு எதிராக "அபூர்வமான" ஒரு புதிய எதிர்ப்பு மருந்தை உருவாக்க வழிவகுத்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

டிம் ஃப்ரைடின் என்பவரின் ரத்தத்தில் இருக்கும் ஆன்டிபாடிகள் (உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதம்) விலங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு வகையான ஆபத்தான பாம்பு விஷங்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குவதாக தெரிய வந்துள்ளது.

தற்போது பாம்புக்கடிக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில், எந்த வகை விஷப் பாம்பு கடித்ததோ, அதற்கு ஏற்ற வகையில் தான் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

ஃபிரைட் கடந்த 18 ஆண்டுகளாக, எந்த வகையான விஷப் பாம்பு கடித்தாலும் வேலை செய்யக்கூடிய வகையில் அனைத்துக்கும் பொதுவான எதிர்ப்பு மருந்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.

பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 14,000 உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. உயிர் பிழைப்பவர்களில் மூன்று மடங்கு மக்கள், உடல் உறுப்புகளை இழப்பது அல்லது நிரந்தரமாக செயலிழப்பது போன்ற கடுமையான விளைவுகளை எதிர்கொள்கிறார்கள்.

உலகின் மிக ஆபத்தான மாம்பா, நாகப்பாம்பு, தைபான், கிரெய்ட் போன்ற பல வகை பாம்புகளிலிருந்து தயாரித்த 700க்கும் மேற்பட்ட விஷ ஊசிகளை தானாகவே தனது உடம்பில் செலுத்தியுள்ள ஃபிரைட் , 200 தடவைக்கு மேல் பாம்பு கடிகளையும் எதிர்கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் பாம்புகளை கையாளும் போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க விரும்பிய அவர் , தனது முயற்சிகளை யூடியூப்பில் ஆவணப்படுத்தத் தொடங்கினார்.

ஆனால், அடுத்தடுத்து இரண்டு நாகப்பாம்புகள் கடித்ததால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டபோது, தான் ஆரம்ப காலத்தில் "முற்றிலும் தவறான முடிவு செய்துவிட்டேன்" என்கிறார் முன்னாள் லாரி மெக்கானிக்கான ஃபிரைட் .

"நான் இறக்க விரும்பவில்லை. ஒரு விரலை இழக்க விரும்பவில்லை. வேலையை இழக்க விரும்பவில்லை," என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

உலகின் பிற பகுதிகளுக்கு பாம்புக்கடிக்கு எதிரான சிறந்த சிகிச்சைகளை உருவாக்குவதே ஃபிரைடின் உந்துதலாக இருந்தது.

"இது ஒரு வாழ்க்கை முறையாக மாறியது, நான் இருக்கும் இடத்தில் இருந்து 8,000 மைல்கள் தொலைவில் பாம்புக்கடியில் இறக்கும் மக்களுக்காக, என்னால் முடிந்தவரை கடினமாக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தேன்." என அவர் விளக்குகிறார்.

'உங்களது ரத்தத்தில் சில துளிகளை பெற விரும்புகிறேன்'

குதிரைகள் போன்ற விலங்குகளுக்கு சிறிய அளவில் பாம்பு விஷத்தை செலுத்துவதன் மூலம் பாம்பு கடிக்கான முறிவு மருந்து ( ஆன்டிவீனோம் ) தற்போது தயாரிக்கப்படுகின்றது.

அந்த விலங்குகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த விஷத்தை எதிர்த்து ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பிறகு அவற்றை சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால் விஷமும், விஷத்துக்கான முறிவு மருந்தும் ஒரே வகையில் பொருந்த வேண்டும்.

ஏனென்றால் பாம்பு கடிக்கும்போது அதில் உள்ள விஷத்தின் நச்சுப் பொருட்கள் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாறுபடும்.

ஒரே இனத்தைச் சேர்ந்த பாம்புகளில் கூட பரவலான வகைகள் உண்டு.

இந்தியாவில் பாம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் விஷ முறிவு மருந்து, இலங்கையில் அதே இனத்தில் உள்ள பாம்பு கடித்தால் அதற்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும்.

ஒரே நேரத்தில் பல வகையான நச்சுக் கூறுகளுக்கு எதிராக போராடக்கூடிய வகையில் "பரவலாகச் செயல்படும் ஆன்டிபாடிகள்" எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்து வகைகளை ஆய்வாளர்கள் தேடத் தொடங்கினர்.

இந்த ஆன்டிபாடிகள், ஒவ்வொரு நச்சுப் பொருளிலும் இருக்கும் தனித்துவமான பகுதிகளை அல்லாமல், பல வகை நச்சுகளில் பொதுவாக காணப்படும் பகுதிகளை குறிவைத்து தாக்குகின்றன.

அப்போது தான் பயோடெக் நிறுவனமான சென்டிவாக்ஸின் தலைமை நிர்வாகி மருத்துவர் ஜேக்கப் கிளான்வில், டிம் ஃப்ரைடைக் குறித்து அறிந்து கொண்டார்.

" உலகத்தில் யாராவது பரவலாகச் செயல்படும் ஆன்டிபாடிகளை உருவாக்கியிருக்க வாய்ப்பு இருந்தால், அது அவராகத் தான் இருக்க வேண்டும் . அதனால் அவரை தொடர்பு கொண்டேன்," என்கிறார் ஜேக்கப் கிளான்வில்.

முதல் முறை அவரை அழைத்த போது, 'இது கொஞ்சம் விசித்திரமாக இருக்கலாம், ஆனால் உங்கள் ரத்தத்தில் சில துளிகளை சோதனைக்காக பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று ஃப்ரைடிடம் கேட்டதாகக் கூறுகிறார் ஜேக்கப் .

அதற்கு ஃப்ரைட் சம்மதம் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் அவர் மீது இன்னும் அதிகமான விஷம் செலுத்தப்படாமல், அவரது இரத்தம் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுவதால், அதற்கு முறையான அனுமதி கிடைத்தது.

Jacob Glanville பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சைகளை உருவாக்க டிம் ஃப்ரைட் விரும்பினார்.

இந்த ஆராய்ச்சி, விஷ பாம்புகளின் இரண்டு குடும்பங்களில் ஒன்றான 'எலாபிட்களை' மையமாகக் கொண்டது. இதில் பவளப்பாம்புகள், மாம்பாக்கள், நாகப்பாம்புகள், தைபன்கள் மற்றும் கிரெய்ட்கள் போன்ற பாம்புகள் அடங்கும்.

எலாபிட்களின் விஷம் முதன்மையாக நியூரோடாக்சின்கள் மூலம் (நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்) தாக்குகின்றன.

இது பாதிக்கப்பட்டவரின் உடலை முடக்கி, சுவாசிக்க தேவையான தசைகளை செயலிழக்கச் செய்யும்போது உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும்.

பூமியில் மிகக் கொடிய பாம்புகளில் ஒன்றாக உலக சுகாதார அமைப்பால் அடையாளம் காணப்பட்ட 19 எலாபிட் வகை பாம்புகளை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். பின்னர், ஆராய்ச்சியாளர்கள் ஃப்ரைடின் இரத்தத்தை பரிசோதித்து, அவரது உடலில் இந்த விஷத்தை முறிக்க உதவும் எதிர்ப்பு சக்தியை கண்டறிய முயற்சித்தனர்.

அந்த ஆய்வில் இரண்டு வகையான நியூரோடாக்சின்களை எதிர்த்துப் போராடக்கூடிய இரண்டு சிறப்பு ஆன்டிபாடிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பின்னர் மூன்றாவது நியூரோடாக்சினை எதிர்க்கும் வகையில், பாம்பு விஷத்துக்கு எதிரான மருந்தை அவர்கள் உருவாக்கினர். அவர்களின் இந்த ஆராய்ச்சி, செல் இதழில் வெளியிடப்பட்டது.

எலிகள் மீது செய்யப்பட்ட பரிசோதனைகளில், 19 விஷ பாம்புகளில் 13 வகை பாம்புகளின் விஷத்திலிருந்து எலிகள் உயிர் பிழைக்க இந்த மருந்து உதவியது. மீதமுள்ள ஆறு வகை பாம்பு விஷங்களுக்கு எதிராக அவை குறிப்பிட்ட அளவு பாதுகாப்பைக் கொண்டிருந்தன.

இந்த எதிர்ப்பு மருந்து " ஒப்பிட முடியாத அளவுக்கு பாதுகாப்பை வழங்குகிறது". பல எலாபிட் பாம்புகளுக்கு எதிராக தற்போது "குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை" என்று மருத்துவர் கிளான்வில் கூறுகிறார்.

Jacob Glanville உலகளாவிய விஷ எதிர்ப்பு மருந்தை உருவாக்குவதற்கு ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆன்டிபாடிகளை மேலும் மேம்படுத்தி, நான்காவதாக ஒரு பொருளைச் சேர்ப்பது எலாபிட் பாம்பு விஷத்திற்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்குமா என்பதைக் கண்டறியவும் இந்த ஆய்வாளர்கள் குழு முயற்சிக்கிறது.

மற்றொரு வகையான விரியன் பாம்புகள், நியூரோடாக்சின்களை உருவாக்குவதை விடவும், இரத்தத்தில் ஹீமோடாக்சின்களை உருவாக்குவதன் மூலமாகவே அதிகம் தாக்குகின்றன.

பாம்பு விஷத்தில் சுமார் ஒரு டஜன் நச்சுகள் உள்ளன. இதில் செல்களை நேரடியாக கொல்லும் சைட்டோடாக்சின்களும் அடங்கும்.

"அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் அந்த நச்சுக்கள் ஒவ்வொன்றிற்கும் எதிராக ஏதாவது ஒன்றை நாம் பெறுவோம் என நான் நினைக்கிறேன்," என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் பீட்டர் குவாங்.

மறுபுறம் ஃபிரைடின் இரத்த மாதிரிகளுக்குள் இதற்கான மருந்தைக் கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன .

"டிம்மின் ஆன்டிபாடிகள் அசாதாரணமானவை. ஏனென்றால் பரந்த அளவிலான விஷங்களை அடையாளம் கண்டு செயல்படுவதற்கு அவரது நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார்" என்று பேராசிரியர் குவாங் தெரிவித்தார்.

எல்லா வகை விஷங்களுக்கும் எதிராக போராடக்கூடிய ஒரே ஆன்டிவீனோம் (எதிர்ப்பு மருந்து) அல்லது எலாபிட்களுக்கும் விரியன் பாம்புகளுக்கும் தனித்தனியாக ஒரு மருந்தை உருவாக்குவதே இறுதி நம்பிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பேசிய லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின் நிறுவனத்தில் பாம்புக்கடியை பற்றிய ஆராய்ச்சி மற்றும் தலையீடுகளுக்கான மையத்தின் தலைவரான பேராசிரியர் நிக் கேஸ்வெல் கூறுகையில்,

"இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அளவு "மிகவும் புதுமையானது". இது ஒரு பயனுள்ள வழிமுறையாக இருக்க முடியும் என்பதற்கான "உறுதியான ஆதாரத்தையும்" வழங்குகிறது" என்றார்.

"இந்த ஆராய்ச்சி புதிய திசையில் இந்தத் துறையை முன்னேற்றுகிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை."

ஆனால், "இன்னும் செய்யவேண்டிய வேலை அதிகமாக உள்ளது" என்றும், மனிதர்கள் பயன்படுத்துவதற்கு முன்பு இந்த ஆன்டிவீனோமை பெரிய அளவில் சோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

இதுகுறித்து ஃப்ரைட் கூறுகையில் இந்த நிலையை எட்டியது "என்னை நன்றாக உணர வைக்கிறது" என்கிறார்.

"நான் மனித குலத்திற்காக நல்லது செய்கிறேன், அது தான் எனக்கு மிகவும் முக்கியமானது. அதைப் பற்றிய பெருமை எனக்குள்ளது. இது மிகவும் நன்றாக உள்ளது".

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.