பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய அரசு சமீபத்தில் பாகிஸ்தானுடனான அனைத்துவிதமான வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளைத் துண்டிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
குறிப்பாக, 1960ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டு அரசியலும், வெளியுறவுக் கொள்கையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியா சிந்து நதியின் நீரை தடுத்து அணை கட்டும் முயற்சி மேற்கொண்டால், அதை பாகிஸ்தான் “நேரடி தாக்குதலாக” கருதும் எனவும், இந்தியா கட்டும் எந்தவொரு அணையும் உடைக்கப்படும் எனவும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார். “தண்ணீரை தடுக்க முயற்சிப்பது பயங்கரவாதத்தையே விட மோசமான தாக்குதல். இது பாகிஸ்தானுக்கு எதிரான போராகும். இந்தியா எந்த அணையை கட்டினாலும், அதனை நாங்கள் தாக்கி அழிப்போம்,” என அவர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி, பாகிஸ்தான் இன்று அப்தாலி எனப்படும் 450 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட நிலைதடையற்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுடன் நிலவிய பதற்றநிலையை மேலும் அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு இதற்கிடையில், பாகிஸ்தானுக்கான அஞ்சல் சேவைகள், பரிமாற்றங்கள், சமூக ஊடகக் கணக்குகள் என அனைத்தையும் முடக்கியுள்ளது. வர்த்தக உறவுளை முற்றிலும் முடக்கும் முயற்சியும் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் முன்னெப்போதுமில்லாத வகையில் மிக மோசமான நிலையிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.