பீகாரில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் பயணத்தை பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை பற்றியும் கூறியுள்ளார். “நான் யாருக்கு ஆலோசனை வழங்கினேனோ, அவர்கள் எல்லாம் வெற்றிபெற்று மன்னர்களாக ஆனார்கள். ஆனால் அவர்கள் மக்களின் வாழ்க்கையை மாற்றவில்லை”. அதனால் தான் அந்த வேலையை விட்டுவிட்டு நேரடியாக மக்களுடன் பணியாற்றத் தொடங்கியதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “என் பெயர் பிரசாந்த் கிஷோர். நான் அரசியல் தலைவரல்ல. என் தாத்தா மாட்டு வண்டி ஓட்டிய தொழிலாளி. என் தந்தை அரசு டாக்டர். நான் கடந்த 10 ஆண்டுகளில் பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கினேன்.
அவர்கள் எல்லாம் ஆட்சியாளர்களாக ஆனார்கள். ஆனால் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஒன்றும் இல்லை என்பதையே நான் உணர்ந்தேன். அதனால் தான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலையை விட்டு விலகினேன்,” என்றார்.
மேலும், “மக்களுக்கு ஆதரவாக, அவர்களது வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் நான் பீகார் மக்களுடன் நேரடியாக கை கோர்த்திருக்கிறேன். நான் ஆலோசனை வழங்கியவர்களுக்கு தேவையான அறிவும் சக்தியும் இருந்தது.
அப்படியிருக்க, அந்த அறிவை பீகார் மக்களுக்கும் பகிர விரும்புகிறேன். உங்கள் கையைப் பிடித்து உங்கள் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதே என் நோக்கம்” என்று உணர்ச்சி மிகுந்து பேசினார். இந்த உரை பீகார் மக்களிடையே பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.