மலையாள சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் விஷ்ணு பிரசாத். சீரியல்கள் தவிர்த்து படங்களிலும் நடித்து வந்தார். அவருக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டு கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்கள்.
அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தார்கள். விஷ்ணு பிரசாத்துக்கு அவரின் மகள் தன் கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக கொடுக்க முன் வந்தார். ஆனால் சிகிச்சைக்கு ரூ. 30 லட்சம் தேவைப்பட்டதால் விஷ்ணுவை காப்பாற்ற உதவி செய்யுமாறு குடும்பத்தார் கோரிக்கை விடுத்தார்கள்.
இந்நிலையில் நேற்று விஷ்ணு பிரசாத்தின் நிலைமை மோசமடைந்து உயிரிழந்தார். அவரின் வயது 49. சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் இருந்த நிலையில் அப்படியே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விஷ்ணு பிரசாத் இறந்த செய்தியை அவரின் நண்பரான நடிகர் கிஷோர் சத்யா தன் ஃபேஸ்புக் போஸ்ட் மூலம் உறுதி செய்திருக்கிறார். விஷ்ணு இறந்த செய்தி அறிந்த மலையாள சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்து சமூக வலைதளங்களில் இரங்கல் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கோகுலம் சீரியலில் விஷ்ணு பிரசாத்துடன் சேர்ந்து பணியாற்றிய நடிகை சீமா ஜி. நாயர் தன் ஃபேஸ்புக் போஸ்ட்டில் கூறியிருப்பதாவது,
விஷ்ணு பிரசாத் இறந்துவிட்டார். பல வருட பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. என் மகன் அப்பு 6 மாத குழந்தையாக இருந்தபோதில் இருந்து விஷ்ணு பிரசாத்தை தெரியும். கோகுலம் சீரியலில் என் சகோதரராக நடித்தார் விஷ்ணு பிரசாத். அண்மையில் மருத்துவமனையில் விஷ்ணு பிரசாத்தை சந்தித்து பேசினேன். நான் ஜோக் சொல்ல அவர் சிரித்தார். நான் மருத்துவமனைக்கு வந்து சென்றது விஷ்ணுவுக்கு சந்தோஷம் என அவரின் மனைவி பின்பு தெரிவித்தார். விஷ்ணுவை காப்பாற்ற கல்லீரல் தானம் செய்ய அவரின் மகள் முன்வந்தார் என்றார்.