“ரூ.2,000 கொடுத்தா தான் ஆச்சு”... லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர்களுக்கு ஓராண்டு சிறை!
Dinamaalai May 01, 2025 08:48 PM

திருச்சியை அடுத்துள்ள அரியலூரில், வீட்டு வரி விதிக்க ரூ.2,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி பில் கலெக்டர்கள் இருவருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் சிங்காரத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், தனது தாயார் பெயரில் வீட்டு வரி விதிக்கக் கேட்டு, 2013 டிச.11ம் தேதியன்று அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பில் கலெக்டர்கள் வீரமணி, கண்ணன் ஆகியோரை அணுகினார். அதற்கு அவர்கள் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லஞ்சம் வாங்கிய வீரமணி, கண்ணன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி மணிமேகலை, குற்றம்சாட்டப்பட்ட வீரமணி, கண்ணன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.