தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு காணாமல் போன 6 வயது சிறுமி ஜாஷ்லின் ஸ்மித் தொடர்பான கொடூரமான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேப் டவுன் அருகே வசித்த ஜாஷ்லின், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காணாமல் போனார். பல நாட்கள் தேடியும் குழந்தை பற்றி தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது தாயார் கெல்லி ஸ்மித், தன் மகளை பாரம்பரிய சிகிச்சையாளர் ஒருவரிடம் விற்றுவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில், கெல்லி ஸ்மித்தின் அயலவர் லோரன்சியா லொம்பார்ட், “நான் என் குழந்தையை சங்கோமாவிடம் விற்றுவிட்டதாக அவரே கூறியுள்ளார். மேலும், சிறுமி காணாமல் போனதை மறைக்க சிலருக்குப் பணம் தரும் முயற்சியும் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், ஜாஷ்லின் பள்ளி ஆசிரியரின் சாட்சியம், “அவள் கப்பலில் இருக்கிறாள், கண்டைனரில் வைத்து மேற்காசியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறாள்” என தாயார் கூறியதாகக் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கில், ஜாஷ்லினின் தாய் கெல்லி ஸ்மித், அவரது காதலர் ஜாக்குவென் அப்பொல்லிஸ் மற்றும் நண்பர் ஸ்டீவெனோ வான் ரின் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். சிறுமியின் அழகிய தோல் நிறம் மற்றும் கண்கள் சூனிய சடங்குக்காக பயன்படுத்தப்படலாம் என்பதால் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொடூரச் சம்பவம் தென் ஆப்பிரிக்காவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக ஊடகங்களிலும் இந்த விவகாரம் பெரும் கவனத்தை பெற்றுள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.