28 வயதில் சுகாதார ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்.. பைக்கில் சென்ற போது விபரீதம்!
Dinamaalai May 04, 2025 09:48 PM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (28). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், திருத்தணியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், விமல்ராஜ் தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கும்பினிப்பேட்டை வழியாக நாகவேடு நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பருத்திபுத்தூரில் தனது சுகாதார குழுவினருடன் வாகனத்தை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து உடனிருந்தவர்கள் அவரை நாகவேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், தொடர்ந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

விமல்ராஜியின் தந்தை தேவராஜ் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விமல்ராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.