கடந்த ஏப்ரல் 30ம் தேதி பாபா சிவானந்துக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், வாராணாசியிலுள்ள பனராஸ் இந்து பல்கலைகழகத்தின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.
மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல், வாராணாசியின் கபீர்நகர் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று சீடர்கள் தெரிவித்தனர்.
சிவானந்துக்கு வயது 128 என அவரது சீடர்களால் கூறப்படுகிறது. பாபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ள பதிவில், “சிவானந்த் பாபாஜியின் மறைவு குறித்து கேள்விப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது வாழ்க்கை நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். யோகா மூலம் சமூகத்துக்கு சேவை செய்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. சிவானந்த் பாபா சிவலோகத்துக்கு புறப்பட்டது காசிவாசிகளான நமக்கும், அவரிடமிருந்து உத்வேகம் பெறும் லட்சக்கணக்கான மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயர நேரத்தில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.