பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோரும் தடகள வீரருமான சின்மை ஹெட்ஜே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது வங்கி கணக்கில் ₹50,000 வரவு வைக்கப்பட்டிருந்ததை கண்டு குழப்பமடைந்தார்.
உடனே வங்கிக்கு சென்று விசாரணை நடத்தியதில், அந்த தொகை சவுதி அரேபியாவிலிருந்து வேலைக்காக சென்றிருந்த ரிஸ்வான் என்பவர் தனது குடும்பத்திற்கு அனுப்பிய பணம் என்பதை கண்டறிந்தார். பிழையான கணக்கு எண்ணின் காரணமாக அந்த தொகை ஹெட்ஜேவின் கணக்கில் தவறுதலாக வந்து சேர்ந்தது.
உடனே ரிஸ்வானை தொடர்புகொண்ட ஹெட்ஜே, தொலைபேசியில் அவர் கதறி அழுவதை கேட்டார். “தயவுசெய்து பணத்தை என் குடும்பத்தினருக்கு திருப்பி அனுப்புங்கள்” என ரிஸ்வான் கெஞ்சினார்.
இதை ஏற்றுக்கொண்ட ஹெட்ஜே, ரிஸ்வான் குடும்பத்தை நேரில் சந்திக்க விரும்பினார். அவரின் வீட்டிற்கு சென்று பார்வையிட்ட போது, வீடு மிக மோசமான நிலையில் இருந்ததோடு, ரிஸ்வானின் தந்தை படுத்த படுக்கையாக இருந்தார். அவரது தங்கை தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்த சூழ்நிலை ஹெட்ஜேவின் மனதை உலுக்கியது. அவர் மாணவியின் முழு கல்வி செலவையும் ஏற்றார். இந்நிலையில், கர்நாடகா வகுப்பு 10 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானபோது, அந்த மாணவி 625 மதிப்பெண்களில் 606 பெற்று 97% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
“முதலில் என் சொந்த அண்ணனை அல்ல… உங்களைத்தான் அழைத்தேன். நீங்கள் எனக்கு உண்மையான அண்ணன்” என கூறியதைக் கேட்டு, ஹெட்ஜே மிகவும் உணர்வுபூர்வமாக வீடியோவில் பகிர்ந்துள்ளார். இந்த உணர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் 4.8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.