கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன.நடனம் ஆடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது , நடந்து வரும் போது கூட மயங்கி சரிந்து பலியாகி வருகின்றன.சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் வசித்து வருபவர் இந்திரஜித் சிங் பாப்ரா. 35 வயதான இவர் பிரபல தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சங்கம் சௌக் பகுதியில் தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு தரையில் விழுந்தார்.
இந்த நிகழ்வு அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் மஞ்சள் டி-ஷர்ட் மற்றும் கருப்பு தொப்பி அணிந்த இந்திரஜித் சிங், ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தவுடன் கீழே விழும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
சில நிமிடங்கள் வலியுடன் துடித்த இந்திரஜித் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சிலரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்திரஜித்தின் மரணம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. “அவருக்கு இதயத்துடன் தொடர்புடைய எந்தவொரு நோயும் முன்பு இருந்ததில்லை” என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், அவசர நேரங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் முதற்கட்ட சிகிச்சையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை நம்மிடம் மீண்டும் எழுப்பியுள்ளது.