தோனி கண்ணில் பட்ட இலங்கை பள்ளி மாணவன் - ஐபிஎல்லில் கலக்கும் இலங்கை வீரர்கள்
BBC Tamil May 05, 2025 08:48 PM
chennaiipl/ instagram

ஐபிஎல் டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே, இலங்கை வீரர்களுக்கு குறிப்பிட்ட அளவு இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சமாந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஜெயவர்த்தனே, ஜெயசூர்யா என ஏராளமான நட்சத்திரங்கள் ஐபிஎல் டி20 தொடருக்கு அழகுகூட்டியுள்ளனர்.

ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்தின்போதும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்களுக்கென தனி கிராக்கி ஏற்பட்டு அணிகள் போட்டிபோட்டு வாங்கியதுண்டு.

2025 ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 19 இலங்கை வீரர்கள் பங்கேற்றனர்.

ஏலத்தில் பங்கேற்ற இலங்கை வீரர்கள்

இலங்கை சார்பில்

  • வனிந்து ஹசரங்கா(ரூ. 2 கோடி),
  • மகீஷ் தீக்சனா (ரூ. 2 கோடி),
  • விஜயகாந்த் வியாசகாந்த் (ரூ. 75 லட்சம்),
  • குஷால் மென்டிஸ் (ரூ. 75 லட்சம்),
  • குஷால் பரேரா (ரூ. 75 லட்சம்),
  • நுவான் துஷாரா (ரூ.75 லட்சம்),
  • ஜாபர் வேன்டர்சே (ரூ. 75 லட்சம்),
  • பதும் நிசங்கா (ரூ.75 லட்சம்),
  • பனுகா ராஜபக்ஸ (ரூ.75 லட்சம்),
  • கமிந்து மென்டிஸ் (ரூ.75 லட்சம்),
  • துஷ்மந்த் சமீரா (ரூ.75 லட்சம்),
  • சரித் அசலங்கா (ரூ.75 லட்சம்),
  • துனித் வெல்லாலகே (ரூ.75லட்சம்),
  • தில்சன் மதுசங்கா (ரூ.75 லட்சம்),
  • துஷான் ஹேமந்தா (ரூ.75 லட்சம்),
  • தசுன் சனகா (ரூ.75 லட்சம்),
  • லகிரு குமாரா (ரூ.75 லட்சம்),
  • ஈஷான் மலிங்கா(ரூ.30 லட்சம்),
  • துமிந்து செவ்மினா (ரூ.30 லட்சம்)
  • ஆகியோர் அடிப்படை விலையில் ஏலத்தில் பங்கேற்றனர்.

    chennaiipl/ instagram முத்தையா முரளிதரன் விலைக்கு வாங்கப்பட்ட 7 வீரர்கள்

    ஆனால், இதில் 7 பேர் மட்டுமே ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்டனர்.

    இதைத்தவிர மதிஷா பதிரணாவை ரூ.13 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்தது.

    ஆல்ரவுண்டர் ஹசரங்காவை அடிப்படை விலையான ரூ.2 கோடியிலிருந்து கூடுதலாக விலை கொடுத்து ரூ.5.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

    அதேபோல சுழற்பந்துவீச்சாளர் தீக்சனாவை ரூ.4.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

    வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாராவின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாக இருந்தநிலையில் அவரை ரூ.1.60 கோடி கொடுத்து ஆர்சிபி அணி வாங்கியது.

    இலங்கை அணிக்கே இன்னும் களமிறங்காத அன்கேப்டு வீரர் வேகப்பந்துவீச்சாளர் ஈஷான் மலிங்காவை ரூ.75 லட்சத்துக்குப் பதிலாக ரூ.1.20 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் அணி வாங்கியது.

    துஷ்மந்த் சமீராவையும் தசுன் சனகாவையும் டெல்லி கேபிடல்ஸ் வாங்கியது. இரு கைகளாலும் பந்துவீசும் திறமை கொண்ட கமிந்து மென்டிஸை அடிப்படை விலையான ரூ.75 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியது.

    தோனியே அழைத்து அணியில் சேர்த்த வீரர்

    2021 ஐபிஎல் ஏலத்தில் சிஸ்கே அணியால் மதிஷா பதிராணா வாங்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டில் கண்டியில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை பார்த்த தோனி, பதிராணாவின் பந்துவீச்சால் ஈர்க்கப்பட்டு அவரை ஏலத்தில் எடுக்கக் கூறினார்.

    பதிராணாவை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இணையுமாறு தோனி கடிதம் எழுதினார்.

    2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக மதிஷா பதிராணா அறிமுகமாகி களமிறங்கினார்.

    தோனியால் பட்டைதீட்டப்பட்ட பதிராணா 2023 ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை சாய்த்தார். நடுப்பகுதி மற்றும் டெத் ஓவர்களில் சிஎஸ்கே பதிராணாவை பயன்படுத்தியது. 2025 ஏலத்தில் பதிராணாவை ரூ.13 கோடிக்கு சிஎஸ்கே அணி தக்கவைத்தது.

    Getty Images தோனியால் பட்டைதீட்டப்பட்ட பதிராணா 2023 ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆர்சிபியின் நம்பிக்கை வீரர்

    இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அறிமுகமாகினார்.

    2021 முதல் 2024 ஆம் ஆண்டுவரை ஆர்சிபி அணிக்காக 26 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளை ஹசரங்கா வீழ்த்தினார்.

    இதில் 2022 சீசனில் மட்டும் ஹசரங்கா 26 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2022 சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஹசரங்கா வீழ்த்தினார்.

    2024 சீசன் முடிந்தபின் ஹசரங்காவை ஆர்சிபி கழற்றிவிட்ட நிலையில் அவரை ரூ.5.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. பந்துவீச்சில் விக்கெட் எடுக்கும் திறமை கொண்ட ஹசரங்கா, தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கும் சிறப்பாக ஆடக்கூடியவர்.

    Getty Images வனிந்து ஹசரங்கா தீக்சனாவை எதிர்த்த சென்னை ரசிகர்கள்

    இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளரான மகீஷ் தீக்சனா கடந்த 2022 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டு தோனியால் பட்டைதீட்டப்பட்டார்.

    2022 ஐபிஎல் தொடரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிக இளம்வயதில் (21 வயது 255 நாட்கள்) 4 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    2022 ஐபிஎல் ஏலத்தின்போது தீக்சனா இலங்கை ராணுவத்தில் பணியாற்றியிருந்ததால் அவருக்கு எதிராக சென்னை ரசிகர்கள் ஹேஸ்டேக் உருவாக்கி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

    சிஎஸ்கே அணிக்காக 2022 முதல் 2024 வரை 32 போட்டிகளில் ஆடிய தீக்சனா 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2024 சீசனோடு சிஎஸ்கே அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட தீக்சனாவை ரூ4.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

    Getty Images மகீஷ் தீக்சனா விலை சரிந்த நுவான் துஷாரா

    இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாரா கடந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.4.80 கோடிக்கு வாங்கப்பட்டார்.

    7 போட்டிகளில் ஆடிய துஷாரா 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். 2024 சீசன் முடிந்தபின், மும்பை அணி துஷாராவை ரிலீஸ் செய்தது. அடிப்படை விலையாக துஷாரா ரூ.75 லட்சம் வைத்திருந்தநிலையில் அவரை ரூ.1.60 கோடிக்கு ஆர்சிபி அணி 2025 ஏலத்தில் வாங்கியது.

    கடந்த 2024 ஏலத்தில் ரூ.4.80 கோடிக்கு வாங்கப்பட்ட துஷாரா, 2025 ஏலத்தில் ரூ.1.60 கோடிக்குத்தான் விலைபோனார்.

    டெத் ஓவர்களில் சிறப்பாக யார்க்கர்களை வீசக்கூடியவர், விக்கெட் எடுக்கும் திறமை கொண்டவர், பந்துவீச்சில் பலவேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களை திணறவிடுபவர் குறிப்பாக தட்டையான ஆடுகளமான பெங்களுருவுக்கு ஏற்றவர் என்பதால் ஆர்சிபி துஷாராவை வாங்கியது.

    mumbaiindians/ instragram நுவான் துஷாரா சர்வதேச அறிமுகம் இல்லாத வீரர்

    இலங்கை அணியிலேயே தேர்ந்தெடுக்கப்படாத வலதுகை வேகப்பந்துவீச்சாளர் இஷான் மலிங்காவை 2025 ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.20 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் அணி.

    ஆனால், 2025, ஐனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில்தான் இஷான் மலிங்கா அறிமுகமாகினார். உள்நாட்டளவிலும், லிஸ்ட்-ஏ பிரிவு போட்டிகளிலும் 50 போட்டிகளில்கூட இன்னும் மலிங்கா ஆடவில்லை.

    ஆனால், இவரின் வேகப்பந்துவீச்சு மீது நம்பிக்கை வைத்து ரூ.1.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் வாங்கியுள்ளது.

    இஷான் மலிங்கா உள்நாட்டு டி20 போட்டிகளில் பந்துவீசியபோது அவரின் எகானமி ரேட் 7.35 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 17.5 ஆக இருந்தது. மிகவும் நெருக்கடியான கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர் என்பதால் மலிங்காவை சன்ரைசர்ஸ் வாங்கியது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதன் முறையாக களமிறக்கப்பட்ட இவர், இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

    sunrisershyd/instagram இஷான் மலிங்கா டெல்லி அணியின் துருப்புச்சீட்டு

    இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர், கீழ்வரிசையில் சுமாராக பேட் செய்யக்கூடிய வீரர் துஷ்மந்தா சமீரா.

    2021ம் சீசனில் பாதியில் ஆர்சிபி அணியில் சமீரா சேர்க்கப்பட்டார். 2022ல் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிலும், 2024சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் சமீரா ஆடினார்.

    ஆனால் 2022 சீசனில் லக்னெள அணிக்காக 12 போட்டிகளில் ஆடிய சமீரா 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2024 சீசனில் கொல்கத்தா அணி சமீராவை ரிலீஸ் செய்த நிலையில் அவரை ரூ.75 லட்சத்துக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது.

    இலங்கை அணியில் தரமான வேகப்பந்துவீச்சாளரான சமீரா ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் தலா 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். ப்ளே ஆப் சுற்றில் டெல்லி அணிக்கு துருப்புச்சீட்டாக சமீரா இருப்பார்.

    Getty Images துஷ்மந்தா சமீரா இரு கைகளிலும் பந்துவீசும் வீரர்

    ஐபிஎல் டி20 தொடர் வரலாற்றிலேயே இரு கைகளிலும் பந்துவீசக்கூடிய முதல்வீரர் இலங்கையின் ஆல்ரவுண்டர் கமிந்த மெண்டிஸ்.

    பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஆல்ரவுண்டர் மெண்டிஸ். 2025 ஐபிஎல் ஏலத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி ரூ.75 லட்சத்துக்கு மெண்டிஸை வாங்கியுள்ளது.

    இதுவரை 2 போட்டிகளில் மெண்டிஸ் விளையாடியுள்ளார். இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடிய இளம் வீரர் மெண்டிஸ், 60 சர்வதேச போட்டிகளுக்குள் 3 விதமான போட்டிகளிலும் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

    - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

    © Copyright @2025 LIDEA. All Rights Reserved.